சமீபத்தில், truecopythink.media என்ற மலையாள வலைதளத்தில் சிகாபுத்தீன் பொய்த்தும்கடவு என்ற மலையாள எழுத்தாளர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், “வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கலுக்கு எதிராக வியக்கத்தக்க வகையில் தாக்குப்பிடித்த மொழியாகத் தமிழ் உள்ளது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளில், சமற்கிருதத்தினைக் கலக்கவிடாமல் மிகக் கவனமாக விலக்கி வைத்தவர்கள் தமிழ்ப் பெருங்குடிகள். தமிழின் பழமையும் இலக்கிய வளமும் அந்த மண்ணின் பெருமைக்குரிய சின்னங்களாக, அரசியல் உந்து ஆற்றலாக இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக கல்வி நிலையங்களில் முதன்மைத் துணைமொழியாகக் கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி, அலைபேசி, கணிப்பொறி, கணிப்பான், பகிரி என சமகால ஆங்கில கருவிகளுக்கும் தொழில்நுட்ப சொற்களுக்கும் கூட தமிழில் சரியான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படுவது போல வேறு மொழிகளில் இல்லை என்றும், சிகாபுத்தீன் பொய்த்தும்கடவு குறிப்பிடுகிறார். தாராளமய உலகிலும் தனித்துவத்தோடு தமிழ் நிலைபெற்றதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா. 1968-இல் அவரால் கொண்டு வரப்பட்ட இருமொழிக் கொள்கை. அந்த இருமொழிக்கொள்கையை ஏந்தாத மாநிலங்களில் எல்லாம் இந்தி மட்டுமே மூன்றாவது மொழியாகப் புகுந்தது.
குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு, புதிய கல்விக் கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் கர்நாடகா அதன் விளைவாக திணிக்கப்பட்ட இந்திப் பாடத்தில், 2024-ஆம் ஆண்டில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தோல்வி அடைந்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி, பெற்றோர் விழி பிதுங்கி நின்றனர். தற்போதைய காங்கிரஸ் அரசு இதுகுறித்து ஆராய குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு, மும்மொழிக் கொள்கையை நீக்கிவிட்டு, இருமொழிக்கொள்கையை அமல் படுத்தலாம் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டின் முடிவை, அரை நூற்றாண்டுகள் தாமதமாக கர்நாடகாவும் கேரளாவும் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.
காக்கப்படட்டும், அவர்களின் தனித்துவப் பண்பாடும்!
நன்றி: ‘முரசொலி’ 11.8.2025