வீ.குமரேசன்
ஒன்றுபட்ட ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி ஒரு சிறப்புத் தகுதி பெற்ற மாநிலமாக இருந்த பொழுது, ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004 இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அந்த மூன்று பகுதிகளும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட பின்பு. முந்தைய நிலையில் இயற்றப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்திற்கு திருத்தத்தினை கொண்டு வரும் நிலைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இல்லாத நிலையில் சட்டத் திருத்த முடிவை ஒன்றிய அரசே எடுத்துள்ளது. இந்தத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் அவசரப் பிரகடனமாகக்கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி லடாக் பிரதேசத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 85 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. எப்பொழுதெல்லாம் பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் தங்கள் பகுதிக்கு மொத்த அளவு இடஒதுக்கீட்டினை 50 விழுக்காட்டிற்கு ேமலே உயர்த்திய பொழுது உச்சநீதிமன்றம் 1992இல் வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்த தீர்ப்பில் (இந்திரா சகானி வழக்கு) கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டி 50 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
லடாக் யூனியன் பிரதேசம் தங்களது நேரடி ஆளுமையின் கீழ் உள்ளதால் இடஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டிற்கு மேலே சென்று 85 விழுக்காடு வரை வழங்கலாம் என ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் பார்ப்பன ஆதிக்க சக்திகளின் நலன் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கருதி, உயர் ஏழைகளுக்கு (அரிய வகை ஏழைகளுக்கு!) வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அடங்காதாம்.
ஆக மொத்தத்தில் 85+10 இரண்டையும் சேர்த்து இடஒதுக்கீடு 95 விழுக்காடு – மீதமுள்ள 5 விழுக்காடு மட்டும் திறந்தவெளி போட்டிக்கு கிடைக்கும். இடதுக்கீட்டு முறையில் தகுதி, திறமை போய் விடுகிறது என்று சொல்லி வந்த பார்ப்பன ஆதிக்கக் கூட்டம் – ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி ஊடகங்கள் உட்பட லடாக் பகுதியில் இடஒதுக்கீடு அதிகரிப்பு குறித்து அங்கலாய்க்காமல் விட்டதேன்?
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசால் எடுக்கப்பட்டு மொத்த இடஒதுக்கீடு 75 விழுக்காடு நிலைக்கு சட்டம் இயற்றி ஒன்றிய அரசுக்கு சில மாதங்களுக்குமுன் அனுப்பப் பட்டது. அனுப்பப்பட்ட வேகத்திலேயே திரும்ப வந்தது. மாநில அரசு நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு அவ்வளவுதான் மரியாதை. இந்தப் போக்கு பற்றி எதுவும் தெரியாமல், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கத் துடித்திடும் அன்புமணி ராமதாஸ், தங்களது வன்னியருக்கான தனி இடஒதுக்கீடு 10.5 விழுக்காடு அளித்திட மாநில அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற குரலை தொடர்ந்து எழுப்பி வருவது எதனால்? நாடு தழுவிய ஜாதி வாரி கணக்கெடுப்பே சரியான தீர்வாக இருக்க முடியும். ஒன்றிய பா.ஜ.க. அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திப் பேசுவாரா?