‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’

நாளும் நடையைத் தவிர்க்காதீர்கள் என்பது முதியவர்கள், மூத்தோருக்கும் மட்டுமல்ல; இளைய சமூகத்திற்கும் இன்றைய இன்றியமையாத் தேவையாகும்! இத்தலைமுறை இளந்தலைமுறையினர் நன்கு படித்து, அறிவு பூர்வப் பணிகள் (White Collor Jobs) என்பதிலேயே அதிக நேரம் கடமையாற்ற வேண்டியவர்களாகிறார்கள்.

முன்பு பெரும்பாலோருக்கு உடல் உழைப்புதான்; அதுவே அவர்களது உடல் நலப் பாதுகாப்பாகவும் அமைந்து இருந்தது!

இப்போது நடக்கின்ற வாய்ப்பே – அவசர உலகத்தில் வெகுவாகக் குறைந்து விட்டது!

அதனால்தான் உடற்பயிற்சிகளுக்கான சிறப்புக் கூடங்கள் (Gym)  முளைத்துள்ளன!

அதிலும் கணினி யுகத்தில் கணினியின் முன்னால் அமர்ந்து அதனைப் பல மணிக்கணக்கில் இயக்கிப் பணிபுரிவது வழமையாகி விட்ட நிலையில், இளைஞர்களும்கூட, குறைந்தபட்ச நடைப்பயிற்சியைத் தவிர்க்கவே கூடாது.

மருத்துவப் பயனாளிகள் மருத்துவமனைகளி லிருந்து திரும்பிப் புத்தாக்க வாழ்க்கையைப் பெறும் போது, மருத்துவர் ஆலோசனை – அறிவுரை பெற்று, நடப்பது முக்கியம். இதய சிகிச்சை பெறுவோரும், இதர சிகிச்சை முறை மருத்துவப் பயனாளிகளும் குறுநடையை வீட்டிற்குள்ளேயே அல்லது தங்களது வாழ்விடத்திலோ பாதுகாப்பான வகையில் நாள்தோறும் பல அடிகள் நடப்பது மிக மிகத் தேவை.

தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் அமர்ந்தே படிப்பதோ, எழுதுவதோ (அல்லது அரட்டை அடிப்பதோ) எதுவானாலும் – வயது முதிர்ந்தவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சில மணித்துளிகளாவது எழுந்து நடந்து பிறகு அமர்ந்து, பணிகளைத் தொடர வேண்டும் என்பது ஜப்பானின் ‘இக்கி கய்’ புத்தகம் கூறுவதாகும்.

தொடர்ந்து அமர்ந்தே இருப்பது உடலில் வாயுத் தொல்லை – வயிறு பெருக்கம் (Flatulence) – இடுப்பு வலிக்குப் பூர்வ பீடிகை – இவை எல்லாம்கூட ஏற்படக் கூடும்.

உடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையான தும், பாதுகாப்பானதும் நடைபயிற்சிதான்!

எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதைக் கணக்கிட (Pedometer) என்ற கருவியை முன்பு பயன்படுத்தினர்.

இப்போதெல்லாம் கைக் கடிகாரங்களே நாம் எத்தனை அடிகள் நடந்தோம் என்பதைக் காட்டும் வசதியை நமக்குத் தருகின்றன.

காலையில் நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளது; மன அழுத்தம் முதலியவற்றைப் போக்கப் பெரிதும் பயன்படுகிறது!

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் (நல்ல உடல் நிலைப் பாதுகாப்புக்கு) எத்தனை அடிகள் நடந்தால் அது சரியாக இருக்கும் என்று தானே கேட்கத் தோன்றுகிறது உங்களுக்கு?

இதற்கு பதில் அளிப்பது எளிதானதல்ல.

பொதுவாக இதனை வரையறுக்கும் மருத்துவர்கள் 10,000  அடிகள் நடப்பது (பத்தாயிரம் அடிகள் – Steps) மிகச் சிறப்பானது என்று கூறுவது ஓர் அறிவுரை!

ஆனால் இது சரியான அளவீடுதானா என்பதில் மருத்துவ நிபுணர்கள் – வளர்ச்சி அடைந்த வெளிநாட்டு மருத்துவ அறிஞர்கள் மத்தியில்கூட பல்வகைக் கருத்துகள் நிலவுகின்றன.

அறிவியலின் தனிச் சிறப்பு எதில் உள்ளது என்றால், எதுவும் ‘இதுவே  முடிந்த முடிவு’ என்று நிரந்தரப்புள்ளி, எவற்றுக்கும் வைத்து விட முடியாது என்பதிலேதான்!

நாளும் ஆய்வுகளும், அனுபவங்களும், அறிவுச்செறிவும் வளர வளர ‘நேற்றைய கருத்தோ – நேற்று புதிது’; ஆனால் இன்றோ ‘பழசாகி’ விட்ட ஒன்று!

வளர்ச்சி – முன்னேற்றம் என்பது இந்த ‘அறிவை’ விரிவு செய்து அறிவியல் உலகம், அகண்டமாக்கும் அதிசயத்தில் தான் உள்ளது!

நாளும் 10,000 அடிகள் என்பது சரிதானா? என்ற கருத்தே பல்வேறு நிலைகளின் மறு பரிசீலனைக்கும், புதிய விவாதங்களுக்கும் அறிவைச் சாணைத் தீட்டத் தயாராகி நிற்கின்றனவே!

அறிவோமா?

(தொடரும்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *