ஆணையமா? ஆணவமா?

3 Min Read

சுதந்திர இந்தியாவில் 1952 முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவு வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன.

ராகுல்காந்தி அதிகாரப் பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர், ஆதாரப்பூர்வமாக பீகாரில் 65 லட்சம் வாக்காளர் பெயர்களைக் காணவில்லை என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.

(1) குறிப்பாக கருநாடக மாநிலம் மகாதேவ் புரா தொகுதியில் 1,00,250 போலி அல்லது தவறான பதிவுகள் (Magic Votes).

(2) இது மாதிரியான பட்டியல் மோசடி மற்ற மாநிலங் களிலும் நடந்துள்ளது.

(3) தொழிலாளர் மற்றும் குடிபெயர்ந்தோர் அதிகம் உள்ள பகுதிகளில் இது பெரும் அளவுக்கு நடந்துள்ளது 33,692.

(4) கருநாடகா மகாதேவ் புரா தொகுதியில் ஆறரை லட்சம் வாக்காளர்களில் 1,00,250 தவறான வாக்காளர் பதிவுகள்.

(5) பொய்யான வாக்காளர்கள் (Duplicate) 11,965.

(6) சரியில்லாத முகவரிகள் (Invalid Address) 40,009.

வீட்டு எண் – 0 அதாவது பூஜ்ஜியம் போன்ற முகவரிகள்.

(7) ஒரே முகவரியில் மொத்தமான வாக்காளர்கள் (Bulk Registration at single addresses) 1452.

(8) மங்கலான ஒளிப்படங்கள் (Invalld or Blurred Photographs) 4132.

(9) முதன் முறையாக வாக்காளர் எண்ணும் நோக்கில் படிவம் 6அய் தவறாகப் பயன்படுத்தியது.

(10) ஒரு சிலர் பல வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பது.

(11) ஒரே நபர் பல வாக்குச் சாவடிகளில் பதிவு – அடுத்த மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில்கூட பெயர்கள் இடம் பெற்றது.

(12) வீட்டு எண் 35, முனிவட்டி, கார்டன், மகாதேவ்புரா – 10–15 சதுர அடி வீட்டில் 80 பேர் பதிவு.

(13) உத்தரப்பிரதேசத்தில் 80 பேர் ஒரு சிறிய வீட்டில்.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதிகாரப் பூர்வமாக, ஆதாரப் பூர்வமாக வைத்த இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் அறிவு நாணயத்துடன் மறுக்க வேண்டும்; அல்லது தவறு நடந்திருக்கிறது என்பதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது அதிகாரிகளை நியமித்துக் களத்திற்கு அனுப்பி என்ன நடந்திருக்கிறது என்பதை  வெளிப்படுத்த வேண்டும் – பொது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் குழப்பத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது.

பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினையில் இந்தியத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்  பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அதில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய தனிப்பட்டியலைத் தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ சட்ட பூர்வமான எந்தக் கட்டாயமும் இல்லை என்று கூறுகிறது.

சட்டத்தின் சந்துப் பொந்துகளில் நுழைந்து தேர்தல் ஆணையம் தப்பிக்கப் பார்ப்பது பரிதாபமே!

வீடடே இல்லாத இடத்தில் அதிக வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றதும், தகுதியற்ற ஒரு சிறிய இடத்தில், கற்பனைக்கே எட்டாத வகையில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டுவதும் எந்த வகையில் சரி என்ற நியாயமான குடி மக்களின் அய்யப்பாட்டுக்குத் தேர்தல் ஆணையத்தின் இந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பதில், அய்யப்பாட்டை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.

கருநாடகத்தில் பொய்யான தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கே ஆறு மாதம் தேவைப்பட்டுள்ளது என்றால், இந்தியா முழுமையும் உள்ள 543 தொகுதிகளிலும் என்ன நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளால் முடியுமா?

ஒன்று மட்டும் உறுதி! தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் முறையைக் கவனித்தால் பெரும்பாலான தொகுதிகளில் தவறு நடந்திருக்க  வாய்ப்பு இருக்கிறது என்ற அய்யப்பாடு பொது மக்கள் மத்தியில் கண்டிப்பாய் ஏற்படத்தான் செய்யும்.

தேர்தல் ஆணையம் என்பது தன்னதிகாரம் கொண்டது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையத்தில் இருவர் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பது சரியல்ல என்ற கருத்துதான் மக்கள் மத்தியில் நிலவும் பொதுவான கருத்தாகும்.

காங்கிரசும் மற்றும் எதிர்க்கட்சிகளும் (300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்) தேர்தல் ஆணையத்தை நோக்கி நேற்று நடத்திய பேரணி ஜனநாயகப் பூர்வமானது – பாராட்டத்தக்க வகையில் தனது கடமையினை ஆற்றியிருக்கிறார்கள்.

இதற்கான பலன் பல மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

எதிர்க்கட்சியினர் வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக விசாரித்து முடிவு செய்யும் முக்கிய கடமை இருக்கிறது என்று வலியுறுத்துகிறோம்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *