திருவண்ணாமலை, ஆக.12- பருவதமலையில் சாமி வழிபாடு செய்து விட்டு கால்வாயை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 சென்னை பெண் பக்தர்களின் உடல்கள் நேற்று (11.8.2025) மீட்கப்பட்டன.
பருவதமலை கோவில்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவிலில் பவுர்ணமியை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 9.8.2025 அன்று சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் 15 பெண்கள் வழிபாடு செய்ய பருவதமலைக்கு சென்றனர்.
இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி தங்கத்தமிழ் (வயது 36), சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மனைவி இந்திரா (58) ஆகியோரும் வந்தனர். அவர்கள் 9.8.2025 அன்று மாலையில் மலை மீது ஏற தொடங்கினர் இரவு உச்சியை சென்றடைந்த அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மலையிலேயே தங்கினர். பின்னர் அவர்கள் 10.8.2025 அன்று மதியத்துக்கு பிறகு மலையில் இருந்து இறங்க தொடங்கினர்.
பலத்த மழை
அப்போது அப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் மலையில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக மலை அடிவாரத்தில் பச்சையம்மன் கோவிலில் இருந்து வீரபத்திரன் கோவில் இடையே செல்லும் மலைக்கால்வாயில் தண்ணீர் சீற்றத்துடன் ஓடியது.
இந்த நிலையில் வெள்ளம் பாய்ந் தோடிய கால்வாயில் 15 பேரும் ஒருவர்பின் ஒருவராக இறங்கி கடந்து கொண்டிருந்தனர். அதில் கடைசியாக வந்த தங்கத்தமிழ் மற்றும் இந்திரா ஆகிய இருவரும் திடீரென நிலை தடுமாறினர். அப்போது இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மீட்புப் படையினர்
இதுபற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்கத்தமிழ் மற்றும் இந்திராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்ட காரணத்தால் அப்பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை மீட்பு குழுவினர் தேடும் பணியை தொடங் கினர். இதில் மலை அடிவாரத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கால்வாயின் பக்கவாட்டில் முட்புதர்களுக்கு இடையே சிக்கி இருந்த இந்திராவின் உடலை தீயணைப்பு படையினர் முதலில் மீட்டனர். தொடர்ந்து தங்கத்தமிழின் உடலை தேடும் பணி நடந்தது. அப்போது சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில் மாதிமங்கலம் ஏரி பகுதியில் தங்கத்தமிழ் உடல் மூழ்கிய நிலையில் தண்ணீரின் மேல் பகுதியில் தெரிந்தது. இதையடுத்து தங்கத்தமிழ் உடலும் மீட்கப்பட்டது.