திருச்சி, ஆக.11- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 49ஆவது ஆண்டு விளையாட்டு விழா 08.08.2025 அன்று அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.கிருக்ஷ்ணகுமார் முன்னிலை வகிக்க, தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி இவ்விழா விற்கு தலைமையேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, கண்டோண் மென்ட் சரகம் பகுதி, காவல்துறை உதவி ஆணையர் பி.எம்.யாஸ்மின் பானு கலந்து கொண்டு நான்கு இல்லங்களை சேர்ந்த மாணவியர்கள் மற்றும் NCC, NSS, Green Crops, JRC, Scout ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் சுடர் ஏற்றி அமைதியின் அடையாளமாக வெள்ளை நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு பெரியார் தொடக்கப் பள்ளி தாளாளர், பெரியார் கல்வி வளாகத்தின் அனைத்து முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியைகள் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்தனர்.
உடற்பயிற்சிகள்
முதலாவதாக பள்ளியின் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த பா.தேவதர்க்ஷினி என்ற மாணவி விளையாட்டு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்றார். அடுத்ததாக மாணவியர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை செய்து காட்டினர். 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவியர்கள் Ball Drill, 8ஆம் வகுப்பு மாணவியர்கள் Mass Drill, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவியர்கள் நீர் ஊற்று வருவது போன்ற உடற்பயிற்சி, 12ஆம் வகுப்பு மாணவியர்களின் லெசிம் (Lezium) நடனம் மற்றும் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும் யோகா, பிரமிடு மற்றும் தற்காப்பு பயிற்சியான சிலம்பம், கராத்தே என விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்தனர்.
பெற்றோர்களுக்கான போட்டிகள்
இறுதியாக பார்வையாளர்கள், பெற்றோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற பெற்றோர் களுக்கு பரிசு வழங்கப் பட்டது. March Fastஇல் முதல் இடத்தை பச்சை நிற அணியினரும் (Green House), இரண்டாம் இடத்தை நீல நிற அணியினரும் (Blue House) பெற்றனர். பள்ளியின் ஒட்டுமொத்த ஓவரால் சேம்பியன் பட்டத்தை (Overall Championship) முதல் இடத்தை மஞ்சள் நிற அணியினரும், இரண்டாம் இடத்தை சிவப்பு நிற அணியினரும் பெற்றனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் உரை
திருச்சிராப்பள்ளி காவல் துறை உதவி ஆணையர் பி.எம்.யாஸ்மின் பானு தமது உரையில், “அனைவரும் சமம், அனைவருக்கும் சம உரிமை என பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கின்ற பெரியார் கல்வி நிறுவனத்திற்கு நான் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கணினி உலகில் வாழக்கூடிய நீங்கள், இந்த அளவிற்கு விளையாட்டிலும் சிறந்து விளங்குவது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த விளையாட்டு விழா சிறப்பாக அமைய மாணவியர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை யாசிரியை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த விளையாட்டரங்கில் நிறைய பெண் வீராங்கனைகளை பார்த்தேன். இதில் எத்தனை பேர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற உயர் பதவிகளில் எதிர்காலத்தில் வரப்போகிறீர்கள்” எனக் கேட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
எல்லவாற்றிற்கும் மேலாக படிப்பு என்பதை முதன்மையாக வைத்தல் அவசியம். எந்தவொரு கவனச்சிதறலும் இல்லாமல் படிப்பில் முழுகவனத்தை செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் தான் இந்தியாவின் சொத்து” என டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மாணவியர்கள் சமூக வலைத் தளங்களில் அதிகமாக நேரத்தை செலவிடக்கூடாது எனவும், தங்கள் பிள்ளைகள் கைப்பேசியை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்கவேண்டும். மாணவிகள் பெற்றோர்களது கனவை நினைவாக்க கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவிகள் ஏற்கச் செய்து தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக 11ஆம் வகுப்பைச் சேர்ந்த சு.யாஸ்மின் என்ற மாணவி நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.