பசுமை தீர்ப்பாயம் ஆணை
சென்னை, ஆக.11- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கலக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மழைநீர் கால்வாயில் கழிவு நீர்
சென்னை திருவான்மியூர் கிழக்கு காமராஜ்நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2022ஆம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “திருவான்மியூர் கிழக்கு காமராஜ்நகர் மற்றும் சிவசுந்தர் அவென்யூ பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கழிவுநீர், மழைநீர் கால்வாயில் கலக்கிறது. இதனால் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மழைக் காலங்களில் இந்த பகுதியில் வசிப்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தது.
இதை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மழைக்காலங்களில் கிழக்கு காமராஜ்நகர் மற்றும் சிவசுந்தர் அவென்யூ பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அப்பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதில் சிக்கல் இருந்தால் அதிக திறன் கொண்ட மோட்டாரை வாடகைக்கு அமர்த்த வேண்டும். கனமழையின் போது மழைநீர் வாய்க்காலில், கழிவுநீர் கலக்காமல் இருப்பதை பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
குடியிருப்புவாசிகள் மழை நீரை சேமிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற குடியிருப்போர் நலச்சங்கம் அறிவுறுத்தலாம்.
கடும் நடவடிக்கை
தனியார் மற்றும் அரசு நிறுவன கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து நீரை சேமிக்க குடிநீர் வடிகால்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
மழைநீர் கால்வாயில், கழிவுநீரை கலக்கும் வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெருநகர சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.