திருச்சிராப்பள்ளி, ஆக. 11- திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில், திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், 3 புறநகர் பேருந்துகள் மற்றும் 1 நகரப் பேருந்து உட்பட மொத்தம் 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று (10.8.2025) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கும்பகோணம் போக்குவரத்து கோட்டம் கலைஞர் தொடங்கியது. அதனால், அதை மாற்றவில்லை. கும்பகோணத்தில் இருந்தாலும் திருச்சியில் இருந்தாலும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வந்து கொண்டுதான் உள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என பாமக, ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்கள். ஆனால், திமுகவை வீழ்த்த முடியவில்லை. திமுகவை விமர்சித்தால் தான், தனக்கு அடையாளம் தெரியும் என்பதால் அன்புமணி ராமதாஸ், திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். பாமகவின் ஒரு தரப்பினர் எங்கள் கூட்டணிக்கு வருவார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.