இடாநகர், ஆக.11- நீதி அதிகார மண்டபங்களில் இருக்கக்கூடாது எனவும், அது பொதுமக்களின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
அதிகார பரவல்
அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கவுகாத்தி உயர் நீதிமன்றத் தின் இடாநகர் நிரந்தர அமர் வுக்கான கட்டிடத்தை தலைமை நீதிபதி சுவாய் நேற்று (10.8.2025) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரை யாற்றிய அவர். அதிகாரம் ஓரிடத் தில் குவிவதை ஏற்க முடியாது எனக்கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் அதி கார பரவலாக்கத்தின் தீவிர ஆதரவாளனாக இருந்து வரு கிறேன். நீதி மக்களின் வீட்டு வாசல்களை சென்றடைய வேண் டும். அதிகார மண்டபங்களில் அது இருக்கக்கூடாது.
மக்களுக்கு நீதி
நீதிமன்றங்களோ, நீதித் துறையோ, சட்டமன்றமோ எதுவும் அரச குடும்பத்தினருக்கோ, நீதிபதிகளுக்கோ அல்லது நிர்வாக உறுப்பினர்களுக்காகவோ இல்லை. மாறாக மக்களுக்கு நீதி வழங்கவே நாம் அனைவரும் இருக்கிறோம்.
இந்த நாடு நிச்சயம் வளர வேண்டும். ஆனால் அது நமது கலாச்சாரம் மற்றும் பாரம் பரியத்தை பலிகொடுப்பதன் மூலம் இருக்கக்கூடாது.
இந்திய ஒற்றுமையின் தீவிர ஆதரவாளராக அம்பேத்கர் இருந்தார். இந்தியாதான் முதலும், முடிவும் என அவர் எப்போதும் கூறுவார். அமைதி மற்றும் போர்க்காலங்களில் நமது அரசியலமைப்பு இந்தியாவை ஒற்றுமையாகவும், வலிமையாகவும் வைத்திருக்கும் என எப்போதும் உறுதியுடன் கூறுவார். அதை நாம் கடந்த 75 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
அரசியல் சாசனமே ‘புனித’ நூல்
ஒவ்வொரு மதத்துக்கும் அதற்கென ‘புனித’ நூல் உண்டு. ஆனால் ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல்சாசனமே மிகப்பெரிய ‘புனித’ நூல் ஆகும். நாம் முதலில் அதைத்தான் நம்ப வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் சமூக சமத்துவம் இல்லாத அரசியல் சமத்துவத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை அம்பேத்கர் நினைவூட்டினார்.வடகிழக்கு பழங்குடி சமூகங்களின் கலாசாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்க அட்டவணைகள் 5 மற்றும் 6-இன் கீழ் அரசியலமைப்பு விதிகள் முக்கியமானது.
இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் பூயன், கோட்டீஸ்வர் சிங், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஸ்னோய், கவுகாத்தி உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அசுதோஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.