ஜாதியும் – பொருளாதாரமும்

4 Min Read

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் வாழும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், நில உரிமையில் கடுமையானப் பாகுபாடுகள் நிலவுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 13 விழுக்காடு பார்ப்பனர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் மொத்த நில உரிமையில் 25 விழுக்காடு நிலங்களை வைத்துள்ளனர்.

இதற்கு மாறாக, உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையில் 20.7 விழுக்காடு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். ஆனால், இவர்கள் மாநிலத்தின் மொத்த நில உரிமையில் வெறும் 4.12 விழுக்காடு நிலங்களை மட்டுமே கொண்டுள்ளனர். மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பாலும் நிலங்களில் கூலித் தொழிலாளர்களாகவும், பண்ணை அடிமைகளாகவும் உள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்கள், உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. நில உரிமையில் இத்தகைய பெரும் வித்தியாசம், சமூக நீதி மற்றும் சமத்துவம் அங்கு எந்த அளவிற்கு மோசமாகி உள்ளது என்பதற்குச் சான்று ஆகும்

அது மட்டுமல்ல, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஜாதி, பொருளாதார ஏற்ற தாழ்வுக்கும் கூடக் காரணமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு செய்து அதற்குரிய பணத்தைப் பெற்றால் அதற்குப் பெயர் கூலி.

அதே நிலையில் பார்ப்பனர்கள் வேலை செய்து அதற்குரிய பணத்தைப் பெற்றால், அதற்குப் பெயர் சம்பளம் அல்லது ஊதியம்.

இந்தியாவில் வேர்ப் பிடித்திருக்கும் ஜாதி என்பது குடும்ப வாழ்க்கையில் பல்வேறு துவம்சங்களைச் செய்து வந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதி சேரியானது;  சேறும், சகதியும், சாணியும் கலந்த பகுதியானது; பார்ப்பனர்கள் வாழும் பகுதியோ அக்ரகாரமானது.

‘அக்ரஹாரம்’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

‘அக்ர’ என்றால் முதலாவது என்று பொருள். ‘ஹா’ என்றால் எடுத்துக் கொள்வது என்று பொருள்; அதாவது அக்ரஹாரம் என்றால் வருவாயில் முதலாவதாகத் தங்களது என்பது. தாங்களே எடுத்துக் கொள்ளும் அல்லது பங்கு பற்று உரிமையுள்ள கூட்டத்தார் என்று பொருள்படும். (தனிப்பட்ட பார்ப்பனர் வருவாய், உரிமை ஆகியவை வேறு)

அது தான் மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்ட நம் மன்னர்கள் வைத்திருந்த ரிசர்வேஷன் கொள்கை.

‘சென்னை மாநிலத்தில் நில உரிமைகள்’ என்ற சட்டப்படிப்பு நூலில் இருந்து (1927இல் டி.எம்.சி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் எழுதியது, பக்கம் 232).

மூன்று வேதங்கள் படித்த பார்ப்பனர்களுக்குத் ‘திரிவேதி மங்கலம்’’ என்றும், நான்கு வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு ‘சதுர்வேதி மங்கலம்’ என்றும் நம் சோழ வீராதி வீரர்களான மன்னர்கள் தானமாகக் கொடுத்தவையாகும்.

இந்தப் பகுதிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே குடியிருக்க முடியும். இவர்கள் அரசனுக்கு வரி கட்டத் தேவையில்லை.

இந்த இடங்கள் கல்வி, வழிபாடு, வேதக் கோட்பாட்டில் சிறந்து விளங்கும் வகையில் அமைக்கப்பட்டன.

நில வருவாய் முழுவதும் அங்கு வாழும் பார்ப்பனர்களுக்கே!

அந்த மங்கலங்களில் உள்ள மக்களிடையே ஏற்படும் தகராறுகளை பார்ப்பனர்களே தீர்த்துக் கொள்ளும் அதிகாரம்.

உள்ளூர் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள் தலையிடாமை போன்ற எண்ணற்ற சலுகைகள். சுருக்கமாகச் சொன்னால் இந்த மங்கலங்களில் பார்ப்பனர்களின் தனி ராஜ்யமே நடந்து வந்தது.

சோழவேந்தர்களால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டதெல்லாம் வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகள் உபநிடதங்கள் போன்றவைதான். படித்த மாணவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே! இந்தப் பின்னணியைச் சரி வரப் புரிந்து கொண்டால்தான் இதுவரை பார்ப்பனர்களின் ஜாதி உணர்வு; நிலவுடைமை, கல்வி வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல;  வருணாசிரமம் குடி கொண்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலைதான்.

எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசத்தில் 13 விழுக்காடு உள்ள பார்ப்பனர்களின் கைகளில் 25 விழுக்காடு நிலங்கள் சொந்தம். 20.7 விழுக்காடுள்ள பட்டியலின மக்களிடத்திலோ வெறும் 4.12 விழுக்காடே!

இந்த ஏற்றத் தாழ்வு தகர்க்கப்பட்டு சமநிலை சமுதாயத்திற்கு முயற்சி எடுக்கப்படும் ஒவ்வொரு நிலையிலும், கடவுளையும், மதத்தையும், பக்தியையும் உயர்த்திப் பிடித்து, போராட வேண்டிய – உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களையே மடக்கி விடுவது பார்ப்பனர்களின் ஹிந்துத்துவா தத்துவமாகும்.

தந்தை பெரியாரும், அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும் இவற்றின் ஆணி வேரில் கை வைப்பதன் முக்கியத்துவத்தைப் பார்ப்பனர் அல்லாதார் ஓரளவு புரிந்து கொண்டுள்ளனர் என்றாலும் முழுமையான அளவில் வெற்றி பெற வேண்டிய அளவுக்கு உணர்ச்சிப் பெற்றிடவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் 20.7 விழுக்காடு உள்ள பட்டியலின மக்களிடத்தில் வெறும் 4.12 விழுக்காடு நிலங்கள் மட்டுமே உள்ளன என்றால் அங்கு ஏன் கிளர்ச்சிப் பீறிட்டுக் கிளம்பவில்லை?

ராமன் கோயிலை, அடுத்து சீதா லட்சுமிக்கும் கோயில், கும்பமேளா – இத்தியாதி இத்தியாதிப் பிரச்சினைகளால் திசை திருப்பப்படுவதுதான் காரணமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் 2014–2015 முதல் 2023–2024 வரை 25,126 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்றால், இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் யார்? பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தானே!

பிஜேபி தொடர்ந்து அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் மேல் ஜாதி ஆதிக்கமும், ஒடுக்கப்பட்ட மக்களின் கீழ்மை நிலையும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!

பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் ஒன்றிணைந்து சமூக நீதிக் கொடியை உயர்த்திப் பிடித்து உரிமைக் கிளர்ச்சியை அறவழியில் மேற்கொண்டால் ஒழிய உயர் ஜாதி பார்ப்பனீய ஆதிபத்தியத்தின் நாட்டாண்மைக்கு முடிவே இல்லை – இல்லவே இல்லை.

‘இண்டியா கூட்டணி’ இந்த வகையில் சிந்தித்துச் செயல்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்பதில் அய்யமில்லை!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *