வதோதரா, ஆக.10– குஜராத் விமான விபத்து தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர உயிரிழந்தோர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். எனவே விபத்து நடந்த இடத்தில் சட்ட நிபுணர்கள் நேற்று முன்தினம் (8.8.2025) விசாரணை நடத்தினர்.
அமெரிக்க சட்ட நிறுவனம்
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே உள்ள மருத்துவக்கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட 260 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த பயணிகள் சிலரும் அடங்குவர்.
பன்னாட்டு அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 65 பேரின் குடும்பத்தினர் அமெரிக்க சட்ட நிறுவனமான பீஸ்லி ஆலனை அணுகி உள்ளனர்.
போயிங் நிறுவனம்
அதன்படி அந்த நிறுவனத்தை சேர்ந்த சட்டநிபுணர் மைக் ஆண்ட்ரூஸ் தலைமையிலான குழுவினர் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததுடன், உயிரிழந்த சிலரின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினர்.
பின்னர் இது தொடர்பாக மைக் ஆண்ட்ரூஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விமான விபத்து குறித்து நடந்து வரும் விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு (போயிங்) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க நீதிமன்றத்தை நாட உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் விரும்புகின்றன.
எனவே என்ன நடந்தது? ஏன் இப்படி நடந்தது? இதற்கு தீர்வாக என்ன வழிகள் உள்ளன? என அறிய விரும்புகிறார்கள்.
வெளிப்படையான தகவல்
எனவே இதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விமானத்தின் தரவு பதிவுகள் மற்றும் விமானி அறையின் குரல் பதிவுகளை இந்திய அரசு வெளியிட வேண்டும். அவற்றை வழக்குரைஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க முடியும்.
விபத்து நடந்த இடத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்.அத்துடன் அங்கே சிலரிடமும் விசாரித்தோம். மேலும் சில ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டோம்.
அத்துடன் இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சில உயிரிழந்தவர்களின் குடும்பத் தினரையும் சந்தித்தோம். விபத்து குறித்த வெளிப்படையான தகவல்கள் மற்றும் பதில்களை அவர்கள் கேட்கிறார்கள்.
அமெரிக்க
நீதிமன்றத்தில் வழக்கு
நீதிமன்றத்தில் வழக்கு
தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 65 குடும்பத்தினர் சார்பாக நாங்கள் நியமிக்கப்பட்டு உள்ளோம். விசாரணை முடிவுகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை முடிவில்தான் விபத்துக்கு எந்த தரப்பு காரணம் அல்லது காரணமில்லை? என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும். போயிங் நிறுவனம் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்.
ஏனெனில் நிறுவனங்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு அமெரிக்காவின் தயாரிப்பு பொறுப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
ஒரு தனிநபர், ஒரு நுகர்வோர் அல்லது குடும்பம், போயிங் போன்ற பன்னாட்டு நிறுவனத்துடன் சமமாக நின்று, அவர்களுடன் நேருக்கு நேராக பொறுப்புக்கூறலைக் கோரும் வகையில் அமெரிக்க சட்ட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மைக் ஆண்ட் ரூஸ் கூறினார்.