சென்னை, ஆக.10– பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து அதில் தீவிரம் காட்டுகிறது.
அந்த வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தாலும், இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாட்டில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரை பகு தியில் பழைய ஆடைகளை கொண்டு வந்தால் துணிப்பையாக மாற்றி தைத்துக் கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி, 200 கிலோ பழைய துணிகளை மக்கள் கொண்டு வந்ததாகவும், அவை துணிப்பையாக தைத்துக் கொடுக்கப்பட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.