உலகச் செய்திகள்

3 Min Read

காசா பட்டினிச் சாவு 197-ஆக உயர்வு

காசா, ஆக. 10– காசாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் 7.8.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் சிலா் உயிரிழந்தனா். இதையடுத்து, காசாவில் உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இதில் 96 போ் சிறுவா்கள்.

இது தவிர, காசா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 29 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். அதையடுத்து, 2023 அக்டோபா் 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 61,258-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காசா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் கூடியிருந்தவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அச்சுறுத்தல் ஏற்படுத்திய சந்தேக நபா்கள் மீது மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

ஆயுத சேமிப்புக் கிடங்கில் வெடி விபத்து ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

உலக செய்திகள்

பெரூட், ஆக. 10– லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா பெரும் இழப்பை சந்தித்தது. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேலுடனான போரை நிறுத்த ஹிஸ்புல்லா ஒப்புக்கொண்டது.

இதையடுத்து ஹில்புல்லா ஆயுதக்குழுவினர் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க லெபனான் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேலுடனான மோதலின்போது எல்லையில் ஹிஸ்புல்லா பயன்படுத்திய ஆயுதக்கிடங்குகளும் லெபனான் ராணுவம் வசம் சென்றுள்ளது. அந்த ஆயுதக்கிடங்குகளில் உள்ள ஆயுதங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் டிரே மாகாணம் சிப்கியுன் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் கைவிடப்பட்ட ஆயுத சேமிப்புக் கிடங்கை லெபனான் ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். அந்த ஆயுதக்கிடங்கள் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ராணுவத்தினர் நேற்று (9.8.2025) ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆயுத சேமிப்புக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு
ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

உலக செய்திகள்

வாசிங்டன், ஆக 10–  ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரி மோதல் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு கெட்டவாய்ப்பானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தற்காக அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக செயல்படும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரெகோரி மீக்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த வரிவிதிப்பு இந்தியாவும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக கட்டி எழுப்பி வந்த உறவை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த கூடுதலான வரி விதிப்புகள் இந்தியா, அமெரிக்கா இடையிலான நீண்ட கால உறவை மிகவும் பாதிக்கும்.

எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை முறையிலோ அல்லது மரியாதைக்குரிய முறையிலோ தீர்க்கப்பட வேண்டும். ஆனால், கடந்த வாரம் 25 சதவீத வரியை விதித்த அதிபர் ட்ரம்ப், இந்த வாரத்தில் கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்துள்ளார். இந்த வரிவிதிப்புகள் மிகவும் அதிகமாகும். இது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *