திருமலை, ஆக.10– இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது:
கருநாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலம் கோயிலில் 1980 முதல் 500 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து கோயில் வளாகத்திலேயே புதைத்துள்ளனர்.
கருநாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதன் காரணமாக உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளனர்.
கோயில் புனிதமான கோயில் வளாகமா அல்லது மயானமா என்று தெரியாத வகையில் 500 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளனர். 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த பகுதியில் போட்டியிட ஒருவர் முன் வந்தார்.
அவர் கூறிய அய்ந்து நாட்களிலேயே அவரது 15 வயது மகள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். எனவே தர்மஸ்தலம் அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு இந்து அறநிலையத்துறையுடன் இணைக்க வேண்டும். அங்கு அறங்காவலர் குழுவினர் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தர்மஸ்தலாவில் 16ஆவது இடத்தில்
தோண்டும் பணி தொடங்கியது
தர்மஸ்தலா கிராமத்தில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைத்துள்ளதாக அங்கு துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் புகார் அளித்தார்.
இதையடுத்து, அங்கு கடந்த 13 நாட்களாக சிறப்பு புலனாய்வு காவல் துறையினர், புகார்தாரருடன், புதைக்கப்பட்ட உடல்களை தேடும்பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று புகார்தாரர் கூறிய ரத்னகிரி மலைப்பகுதியில், உடல்களை தேடும் பணி நடந்தது.
நேற்று (9.8.2025) 16ஆவது பாயின்ட் என குறிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் முன்னிலையில் சோதனை தொடங்கி, குழிகளை தோண்டினர். அப்போது அங்கு பாறைகள் இருந்ததால், சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து சோதனை பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ்அய்டி குழுவுக்கு காவல்நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய மாநில அரசு எப்அய்ஆர் பதிவு செய்யும் அதிகாரமும் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.