சென்னை, ஆக.10– தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனத்தால் ‘விக்ரம்-1′ என்ற தனியார் ராக்கெட் ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதற்கான ராக்கெட் கட்ட மைக்கப்பட்டு வருகிறது. இதில் ராக்கெட்டின் முதல் நிலை உந்து விசைக்காக ‘கலாம்-1200′ என்ற திட மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.
சிறீஅரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்திலுள்ள நிலையான சோதனை வளாகத்தில் இந்த மோட்டார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும் போது, “விக்ரம்-1 ராக்கெட்டில் பயன் படுத்தப்பட உள்ள கலாம்-1200 திட மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.
இது சிறீஅரிகோட்டாவில் உள்ள திட எரிபொருள் ஆலையில் தயாரிக்கப்பட்ட மிக நீளமான ஒற்றைக்கல் மோட்டார் ஆகும். இது 11 மீட்டர் நீளம், 1.7 மீட்டர் விட்டம் கொண்டதாகும். இது 30 டன் திட எரிபொருளை தாங்கி உள்ளது. இந்த மோட்டாரின் சோதனை வெற்றி அடைந்தது.
இந்த சோதனை இந்திய அரசின் விண்வெளி கொள்கை-2023 உடன் ஒத்துப்போகிறது. இது தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இஸ்ரோவின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பயன் படுத்த ஊக்குவிக்கிறது. இந்த சோதனை ஒரு முக்கிய மைல்கல் ஆகும்” என்று தெரிவித்தனர்.