திருச்சி, ஆக. 9– திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 07.082025 அன்று “பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் மூலிகை மருந்தியல்துறை சார்பில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் துவக்கவிழா காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருத்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்து பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து உரையாற்றினார்.
மிகப் பெரிய வாய்ப்பு
கோயம்புத்தூர் யுனைடட் மருந்தியல் கல்லூரியின் மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் என்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல அரிய மூலிகைகளை இனம் காண, அவற்றிலிருந்து கொடுமையான நோய்களுக்கு மருந்துகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுகிறது என்பதனை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் மிகப்பெரிய பொருளாதார செலவுடன் ஆண்டுக்கணக்கில் மருந்தியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்றும், எதிர்காலத்தில் மருந்தியல் கண்டுபிடிப்பில் செயற்கை நுண்ணறிவே முதன்மையாகதாக திகழும் என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் இராகவன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் இராகவன், தமது வாழ்த்துரையில் பெரியார் மருந்தியல் கல்லூரி ஓர் அருமையான தலைப்பினை தேர்வு செய்து இக்கருத்தரங்கினை நடத்துவது மிகவும் பாராட்டிற்குரியது என்றும், மருந்தியல் கண்டுபிடிப்புக்கள்தான் இன்றைய காலத்தின் மிகத்தேவையான ஒன்று என்றும் உரையாற்றினார். மேலும் சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல நிகழ்ச்சிகளை இக்கல்லூரி தொடர்ந்து நடத்திவருவது சிறப்பிற்குரியது என்றும் இதன் நிறுவனர் டாக்டர் கி.வீரமணி சமுதாய மேம்பாடு என்பதனையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால்தான் அவர்களின் நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லும் புரா திட்டத்தை மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சென்ற இடமெல்லாம் பாராட்டினார்கள். இக்கருத்தரங்கில் பங்கு கொண்டுள்ள மாணவர்கள் அறிவியல் ஆய்வு தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு கொண்டு ஆராய்ச்சித்துறைக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் ச. ஷகிலா பானு வரவேற்றார். பேராசிரியர் மு.சாந்தா நன்றி கூறினார்.
அடுத்த தலைமுறைக்கான மருந்து
தொடர்ந்து நடைபெற்ற முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் முனைவர் என்.மகாதேவன் மூலிகை மருந்து ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் தமது முதல் அமர்வினை நிறைவு செய்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இரண்டாவது அமர்வாக சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருந்தியல் கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் சி.ஜெயகாந்த் தங்களது நிறுவன ஆய்வகத்தில் அடுத்த தலைமுறைக்கான மருந்து கண்டுபிடிப்பில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றி சிறீஇராமச்சந்திரா மருந்தியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் மருந்து கண்டுபிடிப்புக்கள் தொடர்பான ஆய்வு மாதிரியை மாணவர்கள் மத்தியில் விளக்கினார். மேலும் செயற்கை நுண்ணறிவினை மருந்தியல் ஆய்வில் பயன்படுத்தும்போது தவறான மற்றும் உத்தேச மதிப்புக்களை உள்ளீடு செய்வது, கணினியியல் மொழிக்கேற்ப மருந்துகளை பிரித்துக்கொள்வது போன்ற முதன்மை செயல்பாடுகளை அறிந்துகொண்டாலே துல்லியமான கண்டுபிடிப்புக்களை நாம் பெறமுடியும் என்று விளக்கினார்.
பண்டையக்கால மருத்துவம்
மூன்றாம் அரங்கமாக மலேசியா AIMST பல்கலைக்கழகத்தின் மருந்தாக்க வேதியியல் துறைத்தலைவர் முனைவர் வி.இரவிச்சந்திரன் பண்டைய மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் இணைக்கும் பாலம் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இணைய வழியில் உரையாற்றினார். அவர் தமது உரையில் பண்டையக்கால மருத்துவ உண்மைகள் ஓலைச்சுவடிகளாக, அழிவின் விளிம்பில் உள்ள புத்தகங்களாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் டிஜிட்டலாக்கம் செய்து, இன்றைய தலைமுறைகளின் ஆய்வியல் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது செயற்கை நுண்ணறிவால் மட்டுமே முடியும் என்பதனை விளக்கினார்.
சிறப்பு கட்டமைப்போடு ஆய்வகங்கள்
கருத்தரங்கின் நிறைவு விழா மாலை 5 மணியளவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையுடன் துவங்கியது. நிறைவு விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மத்தியப்பிரதேசம் குவாலியரிலுள்ள பிரணவ் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஏ.கே.ஞானச்சந்திரன் நிறைவு விழ, சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் சிறந்த கட்டமைப்போடு அறிவு மய்யமாக திகழும் நூலகம் மற்றும் ஆய்வகங்கள் அடங்கிய பெரியார் மருத்தியல் கல்லூரியினை பார்வையிட்டது தமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும், இதனை வழங்கிய நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் தம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இன்றைய இளம் தலைமுறைகள் அதிகமான கருத்தரங்குகள், மாநாடுகளில் அதிகம் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் மருந்தியல் தொடர்பான நவீன தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக்கொள்ள முடியும். பெரியார் மருந்தியல் கல்லூரி இணையவழியிலான (Webinar series – 2025) கருத்தரங்குகள் என்று பல்வேறு நாடுகளிலிருந்து பலப்பல தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துவது உலக அளவிலான மருந்தியல் ஆய்வுகளை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று உரையாற்றினார்.
புத்தகத்திலிருந்து
நிலைத்த அறிவாக
நிலைத்த அறிவாக
மேலும் தொழில்நுட்பங்கள் பல்கிப் பெருகினாலும் புத்தகத்திலிருந்து பெறக்கூடிய அறிவே நிலைத்த அறிவாக திகழ்கின்றது. அத்தகைய அறிவினை வாழ்வில் செயல்படுத்தக்கூடிய மாணவர்களாக ஒவ்வொருவரும் திகழ வேண்டும். இன்று மக்களை அச்சுறுத்தும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் அதிகரித்து வருகின்றது. இவற்றை சரிசெய்வதற்கு மருந்தாளுநர்கள் ஆராய்ச்சித்துறைக்கு அதிகம் வரவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் என்று உரையாற்றி இணைய வழியில் நடைபெற்ற ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் சி. விஜயலெட்சுமி நன்றி கூறினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடை பெற்ற இக்கருத்தரங்கில் 43 பல்கலைக்கழகங்கள், மருந்தியல், சித்தா, இயற்கை மருத்துவம், தொழில்நுட்ப நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 9 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 317 பேர் பங்கு கொண்டு 131 ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.