திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆம் ஆண்டு விளையாட்டு விழா

திருச்சி, ஆக. 10– திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 08.08.2025 காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கலைஞர் கருணாநிதி நகர் சரகம்,காவல் உதவி ஆணையர், கே.கென்னடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்,  மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்குநர்டி.கிருஷ்ணகுமார் அவர்களும், பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவி.எஸ்.ரம்யா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றார். தொடர்ந்து பள்ளியின் மாணவர் தலைவர்.செல்வன். அய்.கைஃப் அகமது, மற்றும் மாணவத் துணைத் தலைவர். செல்வன்.எக்ஸ்.ஆல்வின் ஜெரோன் ஆகியோரின் தலைமையில் பள்ளியின் அனைத்துக் குழுக்களின் அணிவகுப்பு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அணி வகுப்பிற்குப் பின்பு மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை எஸ்.சவுமியா பள்ளியின் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான  விளையாட்டு அறிக்கையை மாணவர்களின் வெற்றிப் பட்டியலாக வாசித்தளித்தார். தொடர்ந்து  பள்ளியின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ,மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் உடற்பயிற்சிகளும், குழுப் பயிற்சிகளும்,  யோகா, சிலம்பம், போன்ற சாகசப் பயிற்சிகளும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது யோகா,சிலம்பம், பிரமிட்  பயிற்சிகளைக் கண்ட பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து, விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர், காவல் உதவி ஆணையர் கே.கென்னடி  அவர்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளையும் பற்றிய அறிவுரைகளைத் தன் உரையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கியதோடு, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் வாழ்வில் உயர்வதற்கு கல்வி ஒன்று மட்டுமே உறுதுணையாக இருக்கும், அத்தகையக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உங்களை நம்பிக் கொண்டிருக்கும் பெற்றோர்களை மதித்து நடந்து அவர்களைப் பெருமைப் படுத்துங்கள் என்றும், திருநங்கையர்களை தீண்டத்தகாவர்களாக நடத்தாமல் அவர்களையும் சக மனிதர்களாக மதியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து, ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடி முதலிடம் பிடித்த சிகப்பு  நிற அணியினருக்கும், இரண்டாம் இடம் பிடித்த ஊதா நிற அணியினருக்கும் சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின், நிறைவாகப் பள்ளியின்  மாணவர் துணைத் தலைவர்.செல்வன்.எக்ஸ்.ஆல்வின் ஜெரோன்  நன்றியுரை வழங்க, விழா நாட்டுப்பண்ணுடன் வெற்றிகரமாக இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் தொடக்கப் பள்ளியின் தாளாளர் ஆரோக்கியராஜ், தலைமையாசிரியை விஜயலெட்சுமி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை.  எஸ்பாக்கியலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக பணித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *