திருவண்ணாமலை மாவட்ட மேனாள் கழக செயலாளர் ப.அண்ணாதாசனுக்கு உலகில் முதல் முறையாக வீணான மனித தலைமுடி மற்றும் கோழி இறகுகளை 100% மறுசுழற்சி என்ற தமிழ்நாட்டின் கண்டுபிடிப்புக்கு பசுமை வாகையர் விருது மற்றும் ரூ.1 லட்சம் பண முடிப்பையும் மாவட்ட ஆட்சியர் ப.முருகேஷ் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு பசுமை வாகையர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழ்நாடு அளவில் 100 பேருக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது
இதனடிப்படையில் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் செய்து காப்புரிமை பெற்றுள்ள திருவண்ணாமலை கழக மேனாள் மாவட்ட செயலாளர் போளூர் ப.அண்ணாதாசனுக்கு பசுமை வாகையர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் வழங்கினார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை பற்றி இவர் கூறுகையில், கோழி இறகு, வீணான மனித தலைமுடி போன்றவற்றை ஊர்களின் ஒதுக்குப் புறங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் கொட்டி செல்வதால் காற்று மாசு அடைவதுடன், வனவிலங்குகளுக்கு தீங்காகவும் அமைகிறது , இதனை 100% மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரத்தை, திரவ நிலையில் தயாரிக்கிறோம்,
இவற்றின் சிறப்பு அம்சங்கள்
எளிதில் பயிர்களுக்கும் செடி கொடிகளுக்கும் மரங்களுக்கும் தெளிப்பான் மூலம் பயன்படுத்தலாம், தெளிப்பவருக்கு 100% சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்துவதில்லை, மிக அதிக விளைச்சலை தருகிறது. இயற்கையான வழிமுறையை சார்ந்தது, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் பயிர்களுக்கு வளர்ச்சியை உண்டாக்கக்கூடியது. இந்த உரத்தை பயன்படுத்திய அய்ந்து நாட்களில் பயிர்களின் வளர்ச்சியை நன்கு அறியலாம்.
இவை உரமாகவும் பயன்படுகிறது பூச்சியை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது என்பது இதன் சிறப்பு . ரசாயன உரங்களின் விலையை காட்டிலும் நான்கு மடங்கு விலை குறைவானது
ஆரோக்கியம்
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கமே அடிப்படை, இன்றைக்கு எல்லா உணவு வகைகளும் நமக்கு தாராளமாக கிடைத்துக் கொண்டி ருக்கின்றன ஆனால் ஆரோக்கியமான சத்தான உணவு என்று பல விடயங்களை நம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
அப்படி சாப்பிடுவதற்கு முன் உண்மையிலேயே நாம் உட்கொள்ளும் உணவு சுத்தமானதா ஆரோக்கியமானதா பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வேண்டும் நாம் வாங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான காய்கறிகள் பழங்களில் தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது உண்மை
இயற்கையாக விளைந்த காய்கறியோ பழமோ பார்ப்பதற்குப் பளபளப்பாகவோ நல்ல நிறத்திலோ இருக்காது. காரணம் செயற்கை உரங்கள்தான். ஒரு பயிரை அதிக தண்ணீர் குடிக்க வைக்கின்றன அப்படிப்பட்ட தாவரத்தில் விளைந்த விளைபொருள்கள் தான் பளபளவென்று பளிச்சென்ற நிறத்திலும் இருக்கும் அந்தக் காய்கறிகளில் சிலவற்றை வீட்டில் விளைவித்துப் பாருங்கள் உண்மை புரிந்துவிடும்
மண்வளம் காப்பது நம் கடமை
காடுகள், மண்வளம் , நீர் வளம் , பறவைகள், பூச்சிகள், பருவநிலை என அனைத்தும் சேர்ந்துதான் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்ய முடியும்
வளமான தாவரவியல் பன்மை இருக்க வேண்டும் என்றால் அங்கு மண்வளம் நன்றாக இருக்க வேண்டும் அதனால் தான் எல்லா வளத்தையும் தரும் மண்ணை தாய்மண் என்று அழைக்கின்றோம் அந்த மண் நல்ல வளத்துடன் இருக்க வேண்டும் என்றால் அங்கு மண்புழுக்கள் உயிர்த்து இருக்க வேண்டும் அதனால் தான் மண் புழு மண்ணுக்கு உயிர் நாடி என்கின்றோம்.
மண்ணில் பல வகைகள் உண்டு. மண்ணை குறிப்பாக களிம்பு , சவுடு , மணல் என மூன்றாகப் பிரிக்கலாம் இடத்துக்கு ஏற்றது போல் இவற்றின் விகிதாச்சாரமும் மாறலாம் இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்கவே மண் வளம் சீரழிந்து வருகிறது மண்ணில் உப்புத் தன்மை அதிகரித்து வருகிறது இந்திய மண்ணில் கரிம சேர்மங்கள் உள்ளடக்கம் நாள் முதல் 5% வரை இருந்தால் நல்லது. ஆனால் தற்போது அதன் தேசிய சராசரியே 0.5 சதவீதம் தான். இதை அதிகரிக்கச் செய்ய இயற்கை முறையில் தயாரிக்கப்படும் திரவ உயிரி உரங்களை பயன்படுத்துவதால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.