ஹிந்தி வடமொழியான சமஸ்கிருதம் குறித்து 1931 ஆம் ஆண்டில் நன்னிலத்தில் கூடிய வட்டார சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கருத்தூன்றத் தக்கதாகும்.
“பழைய புராணக்கதைகளைச் சொல்வதைத்தவிர ஹிந்தி, வடமொழிமுதலிய மொழிகளை நமதுமக்களுக்கும் பழகச்செய்வது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே!
10.5.1931 நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்.
“ஹிந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்குப் பயன்படாத பாஷையாகிய வடமொழி (சமஸ்கிருதத்துக்கு) எவ்வளவுப் பணம் செலவழியச் செய்துவருகின்றனர் என்பது தமிழ் மக்கள் வெகுநாளாகக் கவனித்து வரும் சங்கதியாகும். இப்பொழுது மறைமுகமாக வடமொழியை ஆதரிக்கவும்-ஆரியநாகரிகம், சமயக் கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும், இந்தியை அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப் பார்ப்பது எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அனேகம் பேர் இன்னும் உணரவில்லை” என்று இன்றைக்கு 94 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் தலையங்கமாகத் தீட்டியதை இன்றைய நிலையோடு பொருத்திப் பாருங்கள் பொருள் புரியும்.
பாவாணர் பேசுகிறார்!
வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியைமட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியேயன்றி வேறன்று.
பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.
மணிமேகலையில், வடமொழியாளர்’ (5:40) என்று பார்ப்பனர்க்கும், ‘வடமொழி யாட்டி’ (13:78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத்தல் காண்க.
– தேவநேயப் பாவாணர்
‘ஒப்பியன் மொழி’ நூலில்…
சவுக்கையைச் சுழற்றும் கலைஞர்
சமஸ்கிருதம் – தமிழ்நாட்டில் ஆதிக்கமா? சவுக்கை எடுத்துக் கொண்டு புறப்படுவீர்!
சென்னையில் நடைபெற்ற ஆலடி அருணா அவர்களின் இல்லத் திருமணத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் முழக்கம் (13.6.2016).
விவேகானந்தர்
என்ன சொல்லுகிறார்?
சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருப்பது சமஸ்கிருத மொழியுமே யாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்.”
– மறைமலை அடிகளாரின் ‘தமிழர் மதம்’