அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் தான். இனி வீட்டுக்கு வீடு சமஸ்கிருதம் பேசும் இயக்கத்தை துவக்கவேண்டும். நூறாவது ஆண்டுவிழாவில் சூளுரைக்கவேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியிருக்கிறார்.
நாக்பூர், ஆக 02, 2025 – கவி காளிதாஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்மொழிதான் என்றார். அதன் அருமையைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கடைக்கோடி தொண்டனும் சமஸ்கிருதம் பேசி, கிராமம்தோறும், வீடுதோறும் சமஸ்கிருதத்தைப் பேசப் பழக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாக்பூரில் உள்ள குலகுரு காளிதாஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு மோகன் பாகவத் கூறியதாவது:
“சமஸ்கிருதத்திற்கு அரசு உதவிகள் கிடைக்கும் என்றாலும், மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம். நான் சமஸ்கிருதம் அறிந்திருந்தாலும், சரளமாகப் பேச முடியவில்லை. ஏனெனில் என்னோடு யாரும் சமஸ்கிருதத்திலேயே பேச முடியாதவராக உள்ளனர். இனிமேல் நாம் சமஸ்கிருதத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று, உரையாடலின் ஊடகமாக மாற்ற வேண்டும்.
இன்று நாடு தற்சார்பு அடைவது குறித்து ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கு நமது அறிவார்ந்த திறனையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் என்பது வெறும் சொற்களின் ஊடகம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. நமது உண்மையான அடையாளம் மொழியுடனே பிணைந்துள்ளது.
சமஸ்கிருதத்தைப் புத்துயிர்
பெறச் செய்யும் நிறுவனங்கள்:
சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அன்றாடப் பேச்சுவழக்கு மொழியாக மாற்றுவதிலும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
நாம் ‘தங்கப் பறவையாக’ மாற வேண்டிய தேவை முடிந்துவிட்டது. நாம் ‘சிங்கமாக’ மாற வேண்டும். உலகம் பலத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறது. எனவே இந்தியா பலம்வாய்ந்ததாக இருக்க வேண்டும். இங்கு பல மதத்தவர் இருந்தாலும், அனைவரும் உணர்வால் இந்துக்கள்தான். ஒருவர் தனது மதத்தின் மீது உறுதியாக இருந்தால், அவர் மற்றவர்களை எதிர்க்கிறார் என்ற தவறான புரிதல் பெரும்பாலும் ஏற்படுகிறது.”
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள்:
2025, அக்டோபர் 2 அன்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், ஆர்.எஸ்.எஸ். தனது புதிய மற்றும் பழைய தன்னார்வத் தொண்டர்களை ‘ஷாகா’க்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து ஊர்களிலும் ராம நாமம் பாடப்பட வேண்டும். மேலும், 100-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் உள்ள ‘ஷாகா’க்களில் ‘பத் சஞ்சலன்’ (ஊர்வலம்) நடத்த வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முதல் 200 பேர் கொண்ட கூட்டங்கள் நடைபெறும். சிறிய அளவிலான கூட்டங்கள் ‘ஷாகா’ அளவிலும் நடைபெறும். கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 10 பேர், நகர்ப்புறங்களில் 100 பேருக்கு மேல் சேர்ந்து இந்து மாநாடுகள் நடத்த வேண்டும்.
இதுவரை இல்லாத மிகப்பெரிய ‘கிருக சம்பர்க்’ (வீடுதோறும் தொடர்பு) பிரச்சாரத்தை சங்கம் மேற்கொள்ளும். இதில் தன்னார்வத் தொண்டர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களின் வீடுகளுக்கும் சென்று சங்கத்தின் பணிகளைக் குறித்த தகவல்களை வழங்குவார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
பொறுப்பு மாற்றம் (1940):
1940 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கேசவ பலிராம் ஹெட்கேவார், மரணிக்கும் சில மணி நேரம் முன்பு மாதவ சதாசிவ கோல்வால்கர் (குருஜி) கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். “உயிர் போன பிறகு உயிரற்ற உடலை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இந்த உடல் எரிந்து சாம்பலாவதற்குள் சங்கப் பரிவார அமைப்பை நடத்தும் முழுப் பொறுப்பும் உங்களுடையது. ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்தக் கருத்தை மோகன் பாகவத் தனது உரையில் குறிப்பிட்டார்.
சமஸ்கிருதம் தெய்வ மொழியென்பதும், தமிழ் நீஷப் பாஷை என்பதும் பார்ப்பனர்களின் அசைக்க முடியாத கருத்தாகும்.
அதனால்தான் இன்று வரை கோயில் கருவறைகளில் சமஸ்கிருதத்தில் ஆரியப் பார்ப்பனர்களால் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
பூஜை வேளையில் காஞ்சி சங்கராச்சாரியார் தமிழில் யாரிடமும் பேசமாட்டார் என்கிறார் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
பார்ப்பனர் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாத இல்லத்து நிகழ்ச்சிகளிலும் கூட புரோகிதப் பார்ப்பனர்களை அழைத்து சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லும் நிலை தொடர்கிறது.
தமிழை மட்டும் தட்டி சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கும் ஜெகத்குரு
காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி ‘குமுதம்’ பேட்டி ஒன்றில் (10.12.1998) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல்வாதிகள் இன்னிக்கு வருவாங்க நாளைக்கு போவாங்க. இன்னிக்கு ஒரு கொள்கை, நாளைக்கு ஒரு கொள்கை, இன்னிக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சுன்னு இருப்பாங்க, அவங்க சொல்றதெல்லாம் கேட்டு கோயில்களும் ஆகம விதிகளும் மாறனும்னு கட்டாயம் இல்ல, ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் விதிகள் இருக்கு, வழிமுறைகள் இருக்கு, பழக்க வழக்கங்கள் இருக்கு, எத்தனையோ ஆயிரமாயிரம் வருஷமா இருக்கிற கோயில்கள்ல அரசியல்வாதிகள் தலையிட வேண்டாம்.
இந்தியக் கலாச்சாரத்தில மொழியைப் புகுத்தி ஒரு புதுப்பிரச்சினைய கிளப்பவேண்டாம். தீண்டாமையை ஒழித்து சமூகத்துல எல்லோரும் நல்லாயிருக்கணும்னு பாடுபடறோம். அது வேற. ஆனா நமக்குன்னு இருக்கற பண்பாட்டு விதிகள அரசியல்வாதி சொல்லி மாத்தனுமா? தமிழ்ல அர்ச்சனை செய்தாதான் எல்லாருக்கும் புரியும் அப்படின்னு சொல்றது சரியில்ல. தமிழ்ல சொல்றது எல்லாமே எல்லா தமிழர்களுக்கும் புரிஞ்சுடுமா? அப்படி இருந்தா தேவாரத்துக்கும் உரை வேண்டாம். திருக்குறளுக்கும் உரை வேண்டாம்.
பசியோட பட்டினியோட குறைஞ்ச வருவாயில, ஜீவியம் நடத்திட்டிருக்கற அர்ச்சகர் சொல்லுகின்ற அர்ச்சனை வார்த்தைகள் இன்ன மொழியில்தான் இருக்கணும் அப்படின்னு பிறத்தியார் சொல்ல வேண்டிய தேவையில்லை.
பக்தர்கள், ஆத்மார்த்தமா எந்த மொழியிலயும் கும்பிடட்டுமே! ஆனா, எப்படி ஒரு தொழிற்சாலைன்னா அதுக்கு ஒரு விதியிருக்கோ, ஒரு பள்ளிக்கூடம்னா அதுக்கு ஒரு விதியிருக்கோ, அது போல ஒரு கோவிலுக்குன்னு ஒரு விதியிருக்கு, ஒரு முறையிருக்கு பக்தர்கள் பக்தர்களா இருக்கட்டும். எத்தனையோ கோயில்கள்ல நைவேத்தியம் கிடையாது. சுவாமிக்கு சார்த்த துணி கிடையாது. வருமானம் கிடையாது. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம அதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லாதவர்கள், அர்ச்சனை மட்டும் தமிழ்ல நடக்கணும்னு பேசறது நியாயம்தானா?
பக்தர்கள் வாயாற பாடி, மனமார வாழ்த்தி உள்ளம் உருகி, காதலாகி கசிந்து, கண்ணீர் விடுவதை யார் தடுக்கறா? இன்னைக்கு எத்தனை இந்துக்களுக்கு தேவாரம் தெரியும்? திருவாசகம் தெரியும்? திருக்குறள் தெரியும்? இருக்கற – அர்ச்சனை 108. அந்த நூற்றி யெட்டையும் தமிழில் சொன்னாத்தான் சரியாகும்னு சொல்றது இப்ப அவசியம் ஏனோ?” என்று கூறுகிறார் ஜெயேந்திர சரஸ்வதி.
புரிகிறதா? பெரும்பாலும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தமிழ்நாட்டில் யார்? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தானே! அந்த மொழியில் வழிபாடு நடக்க வேண்டாமா என்ற நியாயமான கேள்வியைக் கேட்டால், போகாத ஊருக்கு வழிகாட்டுகிறவர் – இவர்தான் ஜெகத் குருவாம். உலகத்தையே சுற்றி வளைத்துப் பேசுகிறார் – உள்ளம் முழுவதும் ஆரிய நஞ்சு!
கடவுளை, ஒரு மொழி டப்பாவுக்குள் அடைக்கிறார்களே! தமிழில் வழிபாடு என்றால் ‘திருக்குறள், தேவாரத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?’ என்று விதண்டாவாதம் பேசுகிறார்!
எங்களுக்கு நன்றாகவே தெரியும். சங்கராச்சாரியார் களுக்குத்தான் புரியாது – காரணம் திருக்குறள் கீதையின் மொழி பெயர்ப்பாம்!
கோயிலுக்குள் சமஸ்கிருதம் வந்தது பிற்காலத்தில் தானே! அதற்கு முன் தமிழில்தானே வழிபாடு!
கடவுளுக்கும் மேலே ‘பிராமணர்’ என்று சொன்னவராயிற்றே இந்த சங்கராச்சாரி.
பார்ப்பனர்களும் தமிழர்களே என்று கூறும் தமிழர்கள் கொஞ்சம் எண்ணிப்பார்க்கட்டும்!
சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான ஒரு மொழியல்ல – அது ஒரு கலப்பட மொழியாகும்.
அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான துருக்கி (Turkee) மொழி. ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.
மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்தச் சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.
இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க – பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக – கிரேக்க மொழிக் கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.
மற்றும் சமஸ்கிருத மொழி இந்தியாவின் லத்தீன் மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.
மொழிகளின் பிரிவு
மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.
‘சமஸ்கிருதம்” என்ற சொல்லின் பொருள். சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப்பட்டது என்பதாகும்.
மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ்தானியில் “சான்ஸ்கிரிட்” என்று உச்சரிக்கப் படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும் அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.
– வளரும்