மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை

3 Min Read

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை

அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை, ஆக.9- மாநில கல்விக் கொள்கை வெளியிடும் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் சூழல் மாறும்போது அதற்கேற்றாற்போல், கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவோம். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே உயர்கல்வியை எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்பதை வழிகாட்டக் கூடிய நடைமுறைகளை கொண்டு வர உள்ளோம்.

மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை என்பதை உறுதிப்படுத்திவிட்டோம். தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிட்ட 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடை முறைப்படுத்தப்படாது.

மாநில கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறதோ அதை எந்தத் தடையும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுவதையும், யாருடைய வலியுறுத்தல் இல்லாமல் அதை செய்வதையும் உறுதிப்படுத்துகிறது.

இது இல்லாமல், புதிய திட்டங்கள் செயல்படுத்து வதையும் இப்போதில் இருந்து தொடங்கிவிடுவோம். சமக்ர சிக்சா நிதி (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட மின்நூலகம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு

சென்னை, ஆக.9- சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை கொண்டிருந்த தமிழ் மின்நூலகம் தற்போது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொலிகள், நிலவரை படங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின்நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது.

தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்டுள்ள தமிழ் மின்நூலகத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (8.8.2025) திறந்து வைத்தார்.

நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளர் பிரஜேந்திர நவ்னிட், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் கோமகன், உதவி இயக்குநர் செல்வ புவியரசன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

இவர் எல்லாம் முதலமைச்சராகவும் இருந்தது எப்படி?

வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மாவட்ட ஆட்சியராம்!

சொல்லுகிறார் எடப்பாடி

விருதுநகர், ஆக.9- சாத்தூர் முக்குராந்தலில், வேனின் மீது நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே? அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி.

அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்? அதிமுக, பாஜ கூட்டணி வைத்ததும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார் துரைமுருகன்’’ என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்துடன் பாஜ கூட்டு வைத்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்தியதாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்திலும் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுபற்றி நேரடியாக கண்டனமோ, கருத்தோ சொல்லாமல் பாஜ ஆதரவாக எடப்பாடி கருத்து தெரிவித்து உள்ளார். தேர்தல் என்று வந்தால் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுவார்கள்.

மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக மாறுவார்கள். இது கூட தெரியாமல் கூட்டணியில் உள்ளதால் பாஜவுக்கு வலிக்காமல் அதிகாரிகள் மீது எடப்பாடி குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *