சென்னை, ஆக.9 மதிமுக தலைமை அலுவலகம் நேற்று (8.8.2025) வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் 8 இடங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின்மையை நிலைநிறுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரச்சார கூட்டங்கள் இன்று(9ம்தேதி) தூத்துக்குடியில் தொடங்குகிறது. இந்த பிரச்சார கூட்டம் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம்’ என்ற தலைப்பில் பிரச்சார கூட்டம் நடக்கிறது. 10ஆம் தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11ஆம் தேதி கம்பத்தில், முல்லைப் பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12ஆம்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் நடக்கிறது.
வரும் 13ஆம்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும், மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14ம்தேதி நெய்வேலியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற தலைப்பிலும், 18ம்தேதி கோவை சூலூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பிலும், 20ம்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பிலும் பிரசார கூட்டங்கள் நடக்கிறது. இந்த கூட்டங்களில் வைகோ தலைமை உரையாற்றுகிறார். அதேபோன்று, அனைத்துக் கூட்டங்களிலும் மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் உரையாற்றுவார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்
சிபிஅய் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை!
சென்னை, ஆக.9- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கம்யூனிஸ்டுகள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்டுகள் பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர். ‘இனி ஒருபோதும் அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாது’ என அப்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தார். ஆனால், அவர் அளித்த உறுதிமொழிக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தார். பா.ஜனதாவுடன், அ.தி.மு.க. கூட்டணி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபோது கைகட்டி அமைதியாக இருந்தார்.
தி.மு.க. தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த, பா.ஜனதாவுடன் சேர்ந்து பல முயற்சிகளை செய்து பார்த்து அதில் படுதோல்வி அடைந்ததால் இவ்வாறு பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை எதிர்த்து நடந்த முற்றுகை போராட்டம் தொடங்கி 100-க்கும் மேற்பட்ட போராட்டங்களை கம்யூனிஸ்டு கட்சி நடத்தியது. வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு தங்கத் தாம்பாளம் ஏந்தி நிற்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் என்ற அவரின் பொறுப்புக்கு ஏற்ப பேசக்கற்றுக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
சென்னை,ஆக.9 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜனதா தொடர்ந்து முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கிற மனோபாவம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆளும் கட்சியாக உள்ள பா.ஜனதா மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மோசடியை செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருப்பதால் தான் பா.ஜனதா தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது.
தலைவர் ராகுல்காந்தி தோலுரித்துக் காட்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜனதாவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக வருகிற 11-ஆம் தேதி (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக 11-ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது (செல்வப்பெருந்தகை) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.