சென்னை, ஆக.9 தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். குடும்ப நலத்துறை இயக்குநராக டாக்டர் சதியாவையும், மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலராக டாக்டர் லோகநாயகியையும் அரசு நியமித்துள்ளது. இதற்கான அரசாணையை ஆளுநரின் ஒப்பதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.
பொது சுகாதாரத் துறை இயக்கு நராக இருந்த டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநராக இருந்த டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். அதேபோன்று, குடும்ப நலத் துறை இயக்குநர் பதவிக்கு இதுவரை முழு பொறுப்பு அடிப்படையில் எவரும் நியமிக்கப்படாமல் இருந்தது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி உள்பட 11 மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களும் காலியாக இருந்தன.
பதவி உயர்வு
இந்நிலையில் அப்பொறுப்பு களுக்கு தகுதியானவர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் அதற்கான நியமன ஆணை நேற்று (8.8.2025) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஏ.சோமசுந்தரம், பொது சுகாதாரத் துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநர் டி.கே.சித்ராவுக்கும் அத்துறையின் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் அரவிந்த், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹரிஹரன் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கவிதா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், அக்கல்லூரியில் முதல்வராக இருந்து வந்த டாக்டர் லியோ டேவிட், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் கீதாஞ்சலி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி டாக்டர் பிரியா பசுபதி உள்பட பல மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.