* ஒற்றைப்பத்தி

2 Min Read

‘பக்…’ தீ!

ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதத்தில்’ கேள்வி – பதில் பகுதியில் வெளிவந்தவை இதோ!

கேள்வி: தம்பதிகளின் ஒற்றுமை சிறக்க எந்தக் கோயிலை வழிபடவேண்டும்?

– ஜே.மணிமேகலை, கும்பகோணம்

பதில்: குடும்பத்தில் எதிரும், புதிருமாக செயல்படும் தம்பதிகள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக் குடும்பம் நடத்த காஞ்சிபுரம் அருகே உள்ள காட்டான்குளத்தூர் நானாம்பிகை – காளத்தீஸ்வரரை தரிசித்தால் உடனடி பலன் கடைக்கும். இங்குள்ள நந்தி தேவருக்கு நெய் அபிஷேகம் செய்தால் தங்க நகைகள் சேரும்.

கேள்வி: பொய் சொன்ன பாவம் தீர எந்தக் கோயிலை வழிபட வேண்டும்?

– எஸ்.லலிதாம்பிகா, திருச்சி

பதில்: காஞ்சிபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமியை தரிசித்தால் பொய் சொன்ன பாவம் தீரும். சிவனுக்காக பெருமாள் பொய் சொன்னதால், பெருமாளை பாம்பாக மாறும்படி சபித்தார் பார்வதி. பெருமாளும் காஞ்சிபுரத்தில் தங்கி, சிவனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார். இத்தலத்தில் வழிபட்டால் பொய் சொல்வதனால் ஏற்படும் பாவம் தீர்வதோடு, தோல் நோய்,  திக்குவாயும் சரியாகும்.

பதிலடி: காஞ்சிபுரம் பட்டுச்சேலை, நெல்லை இருட்டுக்கடை அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு என்று விளம்பரம் பெற்றிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால்,  கடவுள் ஒருவரே, அவர் உருவமற்றவர், அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு ஊரில் உள்ள கோயிலைக் குறிப்பிட்டு, அங்குச் சென்று அந்த சாமியை தரிசித்தால், நெய் அபிஷேகம் செய்தால், தங்க நகைகள் சேரும்; தம்பதிகளின் ஒற்றுமை சிறக்கும்; தோல் நோய் ஒழியும்; பொய் சொன்ன பாவம் தீரும் என்று கொட்டி அளப்பது எல்லாம் எத்தகைய பம்மாத்து வேலை!

நீரிழிவு மருத்துவமனை, இ.என்.டி. மருத்துவமனை, பல் மருத்துவமனை என்று சொல்வதுபோல, கடவுள்களிலும் தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகளா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரரைக் கும்பிட்டால் தம்பதிகளின் ஒற்றுமை ஏற்படாதா? திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரைத் தரிசித்தால் பொய் சொன்னதற்கான பாவங்கள் பறந்து ஓடிவிடாதா?

இதில் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; ஒவ்வொரு குற்றத்தையும் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க, பரிகாரம் குறிப்பிட்ட ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசித்தால், நேர்த்திக் கடன்களைக் கழித்தால் அந்தக் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றால், ‘குறைந்த முதலீடு கொள்ளை லாபம்’ என்ற மோசடிதானே இதற்குப் பொருள்! ஏன் இதோடு நிறுத்திவிட்டது ஆர்.எஸ்.எஸ். விஜயபாரதம்?

கொலை செய்த உடனே இந்தவூர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம் என்று சொல்ல மறந்தது ஏன்?

மனிதன் ஒழுக்கத்தோடு வாழ இந்தக் கோயில் தரிசனம் வழிவகுக்கிறதா அல்லது எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்யலாம் – இந்தவூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று தரிசித்தால், நேர்த்திக் கடன்களைச் செய்தால் தப்பிக்கலாம் என்றால், இதற்குப் பெயர்தானா பக்தி?

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதா? ஒழுக்கக்கேட்டுக்கு வழிவகுக்கிறதா?

‘பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து’ என்று தந்தை பெரியார் கூறியதை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள் – மனிதனுக்குத்தேவை ஒழுக்கமா, பக்தியா?

– மயிலாடன்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *