லண்டன் தேம்ஸ் நதி
ஆறுகளை ஆறுகளாக பார்த்தவர்களும், புனிதமாக பார்த்தவர்களும்
லண்டனில் ஓடும் தேம்ஸ், பாரிஸில் ஓடும் செயின், பாங்காங்கில் ஓடும் சாவோ பிரயா (Chao Phraya River) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆறுகள் வெறும் நீரோடைகளாக இல்லாமல், அந்தந்த நகரங்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா அடையாளங்களாகத் திகழ்கின்றன. அவை தூய்மையாகவும், படகுப் பயணங்களுக்கு ஏற்றதாகவும், கண்கவர் அழகுடனும் பராமரிக்கப்படுகின்றன. இந்த நகரங்கள் ஆறுகளைப் பொழுதுபோக்கு மற்றும் அழகியல் சார்ந்த இடங்களாக மட்டுமே பார்க்கின்றன.
ஆனால், இந்தியாவில், ஆறுகள் வெறும் நீரோடைகள் மட்டுமல்ல, அவை புனிதத் தன்மையுடன் ஆன்மிகத்துடன் இணைத்துப் பார்க்கின்றனர்.
கங்கை இந்துக்களின் மிகப் புனிதமான ஆறாகக் கருதப்பட்டு, “கங்கா மாதா” என்று வணங்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் பாவங்களைப் போக்க கங்கையில் நீராடுகிறார்கள். ஆன்மிக நகரமான வாரணாசி கங்கையின் கரையில் அமைந்துள்ளது, இது எண்ணற்ற சடங்குகள் மற்றும் வழிபாடுகளின் மய்யமாக உள்ளது.
வாரணாசி கங்கை நதி
இருப்பினும், புனிதத்தின் பெயரால் கங்கை அடைந்திருக்கும் அவல நிலையை மேலே உள்ள படம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. வாரணாசியில் உள்ள கங்கை கரையில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள், வழிபாட்டுப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், உடைந்துபோன சிலைகள் என எண்ணற்ற அசுத்தங்கள் ஆற்றிலும் அதன் கரைகளிலும் படர்ந்து கிடக்கின்றன. பக்தர்கள் நீராடும் அதே வேளையில், அருகில் மிதக்கும் குப்பைக் கழிவுகளும், நிறமாறிய நீரும் கங்கையின் தூய்மையை கேள்விக் குறியாக்குகிறது.
லண்டனோ, பாரிஸோ பாங்காங்கோ தங்கள் ஆறுகளை “புனிதமானவை” என்று அறிவிக்கவில்லை. ஆனால், அவற்றை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிப் பதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் ஆரோக்கியமான பொழுதுபோக்குக்கு ஏற்ற இடங்களாக மாற்றியுள்ளன. அதே சமயம், கங்கைக்கு “புனி தகுதி கொடுத்து அதன் தூய்மையைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை பொறுப்பு புறக்கணிக்கப்படுகிறது.
இந்த முரண்பாடு இந்தியாவில் ஆறுகள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால். வெறும் ஆன்மீக ரீதியான முக்கியத்துவம் மட்டும் ஆற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கப் போதுமானதல்ல. ஆறுகளைப் புனிதம் என்று கருதுவதை விட்டுவிட்டு அதன் தூய்மையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல், நகர்ப்புற கழிவுநீரைச் சுத்திகரித்தல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் குப்பைகளை ஆற்றில் கலப்பதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
குப்தர்கள் காலத்திற்கு முன்புவரை கங்கை சமவெளி முழுவதும் வணிகம் மற்றும் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது
இது தொடர்பாக யுவாங்க் சுவாங் தனது பயண நூலில் கங்கையில் உள்ள உயிரினங்கள் குறித்து எழுதும் போது அதன் தூய்மை தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட பல உயிரினங்களில் ஒன்றுகூட இன்று கங்கையில் இல்லை அத்தனையும் 12 ஆம் நூற்றாண்டில் மூடநம்பிக்கைகள் பரப்பி விட்டு மெல்ல மெல்ல கங்கையை மாசாக்கி இன்று உயிரினங்களே வாழாத நீண்ட ஆறாக மாற்றி விட்டார்கள்.