வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்’ என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூறிய ‘இராமானுஜர்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று தமிழில் எழுதப்பட்ட வேத நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ மதத்தை பொ.பி.10ஆம் நூற்றாண்டில் பரப்பினார்.
அவர் வழியில் பிறகு வந்த திருவரங்கத்தை சேர்ந்த ‘மணவாள மாமுனி’ என்பவர் (பொ.பி.14ஆம் நூற்றாண்டு) தற்போது பின்பற்றப்படும் ‘தென்கலை’ பிரிவை தோற்று வித்தார். அதே ‘இராமானுஜர் வழியில் வந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த ‘வேதாந்த தேசிகர்’ என்பவர் (பொ.பி.13-14ஆம் நூற்றாண்டு) சமஸ்கிருத ‘நால் வேத’த்தை தான் அடிப்படையாக கொள்ள வேண்டும்’ என்று வைணவ மதத்தில் ஒரு பிரிவை ஏற்படுத்தினார். இதனால் அவர் ஏற்படுத்திய பிரிவுக்கு ‘வடகலை’ என்றும் கூறப்படுகிறது.
தமிழ் நூலான ‘நாலாயிரத் திவ்ய பிரபந்தத்’தைப் பரிந்துரைத்த இராமானுஜர் எழுதிய நூல்கள் அனைத்தும், சமஸ்கிருத நூல்களே! ஆனால், சமஸ்கிருத வேதத்தை பரிந்துரைத்த ‘வேதாந்த தேசிகர்’ பல தமிழ் நூல்களை இயற்றியிருக்கிறார்.
அதில் ஒன்று ‘தேசிகப் பிரபந்தம்’ என்ற வைணவ மத விளக்க நூலாகும்.
அந்த ‘தேசிக பிரபந்த’த்தில் ஒரு பகுதியாக ‘ஆகார நியமம்’ என்கின்ற பகுதி உள்ளது. அதில் எந்தெந்த உணவை உண்ணலாம், எப்போது உண்ணலாம், யார் யார் உண்ணலாம் என பட்டியல் போடப்பட்டுள்ளது.
அதில் உள்ள ஒரு பாடல் வருமாறு:
“சாதி குணம் ஆசிரமந் தேசங் காலம்
தர்மங்கள் நிமித்தங்கள் முதலாவோதும்
பேத முதலாக வொரு திரவியந் தான்
பிரிந்து நவந்தீங்கினையும் பெற்று நிற்கும்
பாதமிசைப் பிறந்தோர்க்குக் கபிலையின் பால்
பருகிடலாகா தென்று மறையோர் சொன்னார்.’’
– ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், ஆகார நியமம் – பாடல் 20
மனிதர்கள் எல்லோருக்கும், ஒரே வகையில் வேதத்தில் நீதி வகுக்கப்படவில்லை; ஜாதி குணத்திற்கு ஏற்றார் போல் நீதி வகுக்கப்பட்டுள்ளது; ‘ஒரு ஜாதிக்கு உகந்த உணவு வேறொரு சாதிக்கு ஆகாத உணவாகும். பார்ப்பனர்கள் மட்டுமே குடிக்க வேண்டிய ‘காராம்’ (கபிலை) பசுவின் பாலைக் கடவுளின் கால் பகுதியிலிருந்து பிறந்த சூத்திரர்கள் குடிக்கக்கூடாது; குடித்தால் நரகத்தை அடைவார்’ என்று ‘மறையோர்’ சொன்னதாக அதாவது ‘ஸ்மிருதிகள்’ சொன்னதாக இப்பாடல் வழியாக ‘வேதாந்த தேசிகர்’ கூறுகிறார்.
பார்ப்பனர்கள் மனிதர்களில் மட்டும் ஜாதி பிரிக்கவில்லை தனக்கு நெருக்கமான பல உயிரினங்களிலும் ஜாதிகளைப் பிரித்து வைத்துள்ளனர்.
கருப்பாக இருக்கும் உயிரினங்களைப் ‘பறை’ என்ற அடைமொழியாலும் மற்ற நிறங்களில் இருப்பவைகளைப் ‘பிராமண’ என்ற அடைமொழியாலும் அழைக்கின்றனர்.
வடமாநிலங்களில் ‘பிராமணப் பசு’ என்றும் ‘சூத்திரப் பசு’ என்றும் பிரித்து வைத்துள்ளனர்.
பொதுவாக பசுக்கள் கருப்பு, சிவப்பு, வெள்ளை போன்ற மூன்று வகையான நிறங்களைக் கொண்டவை.
‘காராம் பசு’ என்பது உடல் முழுவதும் கருமை நிறத்தை உடையதாகும். இவற்றிற்கு காரணம் சில மரபணு (ஜீன்) வகைகளாகும்.
‘காராம் பசு’வின் பால் சிறிது அடர்த்தியாக இருக்கும். அதற்கு ஏற்றால் போல் கூடுதல் சுவை இருக்கும்.
கருப்பாக இருப்பதனாலேயே எருமையை புறக்கணிக்கும் பார்ப்பனர்கள், ‘காராம் பசு’ கருப்பாக இருந்தாலும் அதன் பயன் கருதி மற்றவர்களைக் குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தாங்களே குடிப்பதற்காக, “வேதம் கூறுகிறது” என்று ஜாதி அடிப்படையில் சதித் திட்டம் வகுத்து வைத்தனர் என்பது இதனால் புலனாகின்றது.