மூடநம்பிக்கைகள் பலவிதமாகவும், ஒவ்வொரு நாட்டிலும் – ஏன் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. கல்விக்கு சரஸ்வதி இருக்கின்ற இந்த நாட்டில்தான் படிக்காத தற்குறிகள் அதிகம். சரஸ்வதியே இல்லாத நாட்டில் 95 சதவீதம் பேர் படித்தவர்கள் இருக்கின்றார்கள். அறிவியல் படித்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமை, காலம் நேரம் பார்த்து காலத்தை வீணாக்குதல், கையிலே கயிறு கட்டி கோழை என்று தன்னைத்தானே அறிவித்தல், ஜோதிடம், வாஸ்து, கைராசி என்று நம்புதல் போன்ற பிற்போக்கு செயல்பாடுகளை கடைப்பிடிக்கின்ற மனிதர்கள் சமுதாயத்தில் காணப்படுகின்றனர். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்.
மூடநம்பிக்கை (Superstition):
இயற்கைக்கு மேலான சக்திகள் பற்றிய புரிதலின்மை. குருட்டு நம்பிக்கை. பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காது கண்ணை மூடிக்கொண்டு மிகுந்த அச்சத்தோடு பல்வேறு இயற்கை நிகழ்வுகளை எண்ணி கலங்கி வாழும் நம்பிக்கையுடையவர்களாக மனிதர்கள் இருந்தனர்.
சடங்குகள், சம்பிரதாயங்கள், ஏன்? எதற்கென்று? சிந்திக்காமல் பயத்தினால் அதிசயங்களாகப் பார்த்து அவைகளைக் கெட்டியாக வழிவழியாகப் பிடித்துக் கொண்டு அதிலிருந்து மாற மறுக்கும் பிடிவாதம் மற்றும் காரணக் காரிய விளக்கத்திற்கோ, ஆய்வுக்கோ இடம் தராத ஒரு கண்மூடி வழக்கம் – இதுதான் மூடநம்பிக்கை.
மூடநம்பிக்கைகள்
நிலைத்திருப்பதற்கு அடிப்படை
பயம், குருட்டு நம்பிக்கை, பகுத்தறிவு வழி நின்று ஆராயாதது.
பகுத்தறிவுக்கு நேர்மறான முரண்பட்ட மனப்போக்கு (Attitude)
அறிவியல் என்பது, “முறைப்படுத்தப்பட்ட ஆதாரங்களையும், சான்றுகளையும் அனுபவ பரிசோதனைகளுக்கும், உட்படுத்தப்பட்ட அறிவும், அனுபவமும், காரண காரிய விளக்கத்தின் வெளிப்பாடு.
முடிந்த முடிவு என்று இறுதி இல்லை. மாற்றங்களை எப்போதும் வரவேற்கக் காத்திருக்கும் திறந்த மனப்பான்மை.
அறிவியலோ நேற்றைய கண்டுபிடிப்பு, இறுதியானதல்ல. இதோ இன்றைய ஆய்வு அதை மாற்றி மேலும் புதியதோர் வெளிச்சத்தைப் பாய்ச்சும்.
மூடநம்பிக்கை, இருள், அறிவியல், வெளிச்சம்.
அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள்:
மூடநம்பிக்கை அறியாமை பெற்றெடுத்தக் குழந்தை.
அறிவியல் அக்குழந்தையை அந்த அறியாமை நோயிலிருந்து விடுதலை செய்து புத்தறிவு புகட்டி, புதுமையை ஊட்டி புத்தாக்கத்தினைத் தரும் ஒன்றாகும்.
மூடநம்பிக்கையை விரட்டிய அறிவியல் சாதனைகளைப் பற்றிப் பல்வேறு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்திகள் அறிவியல் வரலாற்றில் ஏராளமாக காணப்படுகின்றன.
மனிதர்களுக்கு கிருமிகளால் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே அவைகளை அழிக்க மருந்துகளை எடுத்து சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழ வேண்டும் என்பது இன்று சாதாரண நடைமுறை.
புரிந்தது. ஆனால் சிலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூடநம்பிக்கை பின்வரும் வடிவில் ஆட்சி செய்தது.
கடவுள் மனிதர்களைப் படைப்பதாகவும், அவர்களின் பாவத்திற்குத் தண்டனையாக நோய்களைத் தருவதாகவும், அதை ஏற்று மடிய வேண்டுமே தவிர எதிர்த்து சிகிச்சை தருவது கடவுளுக்கு விரோதமான ஒன்று என நம்பி வந்தனர்.
எனவே நோய் தீர்க்க முன்வந்த மருத்துவர்களை சாத்தானின் ஏவுகள் என்று நம்பினர். எனவே அவர்களைக் கொல்லுங்கள், விரட்டியடியுங்கள் என்று ஒரு காலத்தில் மருத்துவர்கள் வேட்டையாடப்பட்டனர்.
மூடநம்பிக்கைகள் பலவிதம்
அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்:
சோதிடத்தில் கைரேகை வாஸ்து என்பன போன்ற வகையறாக்கள் உண்டு. மூலமே முட்டாள்தனம் என்றால் அதன் வகையறாக்கள் வடிக்கட்டின முட்டாள்தனமாகத் தானே இருக்கும். ‘குமுதம்’ பத்திரிக்கை ஒருமுறை உருப்படியான காரியத்தை செய்தது. ஒரு பிரமுகரின் கைரேகையைப் பதிவு செய்து சென்னையில் உள்ள நான்கு பிரபல சோதிடர்களிடம் கொடுத்து அதற்குப் பலன் கணித்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசியலில் மிகவும் உயர்ந்தவர் என்றார் ஒரு சோதிடர்.
எதிர்காலத்தில் இன்னும் உயர்பதவிகள் எல்லாம் காத்திருக்கின்றன என்று ஒரு போடு போட்டார் இன்னொரு சோதிடர்.
இன்னொரு சோதிடர் சொன்னது அதைவிட தமாஷாக இருந்தது. இவர் ஓர் பிரபலமான சினிமா நட்சத்திரம், உலகம் முழுவதும் பேசப்படுபவர் என்று தன்பாட்டுக்குக் கதையளந்தார்.
அடுத்தவர் தம் மனம் போக்கில் எதை எதையோ உளறினார்.
உண்மையிலேயே அந்த கைரேகைக்கு உரியவர் யார் என்பதை அதே ‘குமுதம்’ இதழ் வெளியிட்டபோது வெடிச்சிரிப்பாக இருந்தது. அந்த கைரேகைக்கு உரிய ஆசாமி யார்? என்றால் சென்னை அண்ணாசாலையில் ஒரு பிச்சைக்காரன் ஆவார்.
மூடநம்பிக்கையின் முடைநாற்றம் :
சாமியார் மோசடிகளில்:
இன்றைய காலக்கட்டத்தில் வேகமாகப் பரவிவரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான் இதற்குக் காரணம். குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனம் கூட.
மக்களின் அந்த பலவீனத்தையே மூலதனமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில் பார்த்தீனிய செடிப்போல் மானாவாரியாக முளைத்து வருபவர்கள்தான் இந்த போலிச் சாமியார்கள் ஆவார்.
ஊடகங்களில்…
திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கின்றனவோ அதேபோல உரம் போடாமல் மூடநம்பிக்கையையும் வளர்த்து விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு கிராமத்தில் நீண்ட ஆண்டுகளாக மழையே பொழியாமல் வானம் பொய்த்து விட்டது. அந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால் ஒரு கன்னிப்பெண் இரவு நேரத்தில் கையில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு உடலில் துணியின்றி நிர்வாணமாக கிராமத்தை வலம் வரவேண்டும் என்று சோதிடர் கூறுவார். எந்த வீட்டு பெண்ணை இவ்வாறு கிராமத்தை வலம் வரச் செய்வது? அத்தனை வீட்டு கன்னிப் பெண்களின் பெயர்கள் எழுதிய சீட்டுகளைப் பானையில் குலுக்கி ஒரு சீட்டை எடுத்தால் அது ஊர் நாட்டாமைப் பெண்ணின் பெயராக இருக்கும் இப்படியாக ஒரு திரைப்பட காட்சி இடம்பெறும்.
சோதிடத்தில்…
மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் நாம் மூடநம்பிக்கையில் சிக்கி தவிக்கின்றோம். அவசியம்தானா? சற்று யோசித்துப் பாருங்கள். இப்போது எல்லாம் இங்கு நான்கு தெருவிற்கு ஒரு சோதிடம், நாலு ஊருக்கு ஒரு சாமியாரும் வந்துவிட்டார்கள். சிலர் தும்மல் வந்தால்கூட மஞ்சள் பையில் சாதகத்தைத் திணித்துக்கொண்டு சோதிடர் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி விடுகிறார்கள்.
சிலர் காலையில் எழும்பும்போது யார் முகத்தில் விழிப்பது மனைவியா? மச்சினிச்சியா? வேலைக்காரியா? நாயா? நரியா? பூனையா? என தனது ஆஸ்தான சோதிடரிடம் ஆலோசனை கேட்டுத்தான் கண்விழிக்கிறார்கள்.
நாள்தோறும் தொலைக்காட்சியில் அதிகாலையில் தெய்வீக திராவிட ஆருடம் என்ற பேனரில் இளைஞர் ஒருவர் லக்கனம் ராசிகளுக்கு ஆருடம் சொல்கின்றார். இந்த ராசிக்காரர் இன்ன நிற சட்டையை போட்டுச் செல்லவும், இந்த திசை உங்களுக்கு ஆகாது, ஜாமீன் கையெழுத்துப் போட்டு விடாதீர்கள் என்று கூறுகின்றார்கள். இப்படித்தான் கும்பகோணத்தில் பகுத்தறிவு இயக்கத் தோழர் திம்மக்குடி சிற்பிராசன் ஒரு செயலைச் செய்தார். ஒரு பசுமாடு கன்று ஈன்றது. அந்தக் கன்று ஈன்ற நேரத்தை சரியாக குறித்துக்கொண்டு ஒரு சோதிடரிடம் சென்றார். அந்த நேரத்தில் தன் வீட்டில் குழந்தை (ஆண்) பிறந்ததாக பொய்சொல்லி சோதிடம் கணித்து எழுதித்தர சொல்லி ரூ.200 கொடுத்தார். அந்த சோதிடரோ, “இந்த நேரத்தில் பிறந்த இவர் 12ஆம் வயதில் இப்படி இருப்பார், 25ஆம் வயதில் உச்ச நிலையை அடைவார்” என பரவலாக எழுதிக் கொடுத்தார். சிற்பிராசனோ அந்த பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியின் படத்தையும் அதனுடன் சோதிடரின் படத்தையும் போட்டு அவர் கணித்து கூறிய சோதிடக் கணிப்புகளையும் பிளக்ஸில் விளம்பரமாக பொதுமக்கள் பார்வைக்கு வைத்துவிட்டார்.
பிறகென்ன சோதிடரின் நிலை கவலைக்கிடமாக போய்விட்டது. ஒரு வழியாக சோதிடர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதின் பேரில் ஃபிளக்ஸ் அப்புறப்படுத்தப்பட்டது.
திருமண முறையில்…
எத்தனைத் திருமணங்கள், நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து சோதிடம் பார்த்துப் பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள் இன்று மணவிலக்குக் கேட்டு நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி வருகின்றார்கள். உண்மையில் இவர்கள் இந்த சோதிடம், வாஸ்து. நல்லநேரம். கெட்ட நேரம். அஷ்டமி நவமி போன்ற மூடநம்பிக்கையிலிருந்து எப்போது விழித்துக் கொள்ளப் போகிறார்களோ? தெரியவில்லை. இப்போது எல்லாம் கற்பூரசாமியார். சாம்பிராணி சாமியார், ஊதுபத்தி சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்கள்.
இப்பொழுது பீர் சாமியார், பிராந்தி சாமியார். சுருட்டு சாமியார் என்று மதுபான பெயர்களைக் கொண்டவர்கள் காவிகட்டி நெற்றி நிறைய நீறு பூசி ஏமாற்றத் துணிந்துவிட்டார்கள்.
இந்த சின்ன சின்ன சாமியார்கள் தவிர தங்களையே கடவுளாகக் காட்டிக்கொள்ளும் மிகப்பெரிய கார்பரேட் சாமியார்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பாதபூஜை செய்து பல இலக்க பணத்தை அள்ளி வழங்கி பாதுகாப்பு அளிக்கும் சில பணக்காரர்களும் ஏன் பெரிய பதவியில் உள்ளவர்களும் அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த கடவுளின் அவதாரங்களுக்கு மாபெரும் சக்தியாய் நாட்டிற்கு வந்த பேரழிவுகளான சுனாமி. சூறாவளிகளை முன் கூட்டியே சொல்ல முடியவில்லையே? ஏன்? இவர்களால் எதுவும் முடியாது. காரணம் சாமியார் என்ற முகமூடி அணிந்து சமுதாயத்தை ஏமாற்றும் இவர்களில் பலரும் சமூகவிரோதிகளே.
நடையாய் நடந்து நம்மிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமரும் அரசியல்வாதிகள்கூட இதுபோன்ற போலிகளிடம் ஆசி பெற்று அரசியல் நடத்தும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இந்த அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைகளை விட இதுபோன்ற சாமியார்களுக்குச் செய்யும் சேவைகள் தான் அதிகம்.
உழைத்துக் கிடைக்கும் பலனைவிட குறுக்கு வழியில் கிடைக்கும் பலனையே அதிகம் எதிர்பார்க்கும் மனிதர்கள் அதிகமாகி வருவதால் மூடநம்பிக்கையான ஏமாற்று வேலைகளும் தங்கு தடையில்லாமல் எல்லா இடங்களிலும் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒருபுறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்க வழக்கங்களும் மற்றொரு பக்கம் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது.
(தொடரும்…)