சென்னை, ஆக.8 அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்குரைஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்க மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் ஆகிய நான்கு அதிகாரிகளை அண்மையில் தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து வழக்குரைஞர் சத்தியகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அரசிதழில் அரசாணையாக வெளியிடாமலும் நான்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளதாகவும், இதனால் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “அய்ஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை.அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அய்ஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை. அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்குரைஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் உத்தரவிடுகிறோம். அய்.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.’’ இவ்வாறு தெரிவித்தனர்.