சென்னை, ஆக. 8- மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 4ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் 6.8.2025 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த அவகாசம் மீண்டும் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளை மாற்றிக் கொள்ள விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 13ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை வரும் 14ஆம் முதல் 22ஆம் தேதி வரை பிற்பகல் 12 மணி வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
‘வெர்டிஸ்’ என்ற பெயரில்
ஒரு சிறிய நாட்டை உருவாக்கிய ஆஸ்திரேலிய இளைஞர்
ஜகரிப், ஆக. 8- குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையே, டானூப் நதிக்கரையில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், இந்த ‘வெர்டிஸ் குடியரசு’ என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் (Daniel Jackson) என்ற 20 வயது இளைஞர் உருவாக்கினார். இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி இந்த மைக்ரோநேஷனை (micronation) அவர் நிறுவினார்.
இந்த நாட்டிற்கு தனிக்கொடி, அமைச்சரவை, கரன்சி மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர். அக்டோபர் 2023-இல், குரோஷிய அதிகாரிகள் ஜாக்சன் மற்றும் அவரது குடிமக்களைக் கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர். மேலும், வாழ்நாள் முழுவதும் அங்கு வரத் தடை விதித்தனர். ஆனால், செர்பிய அதிகாரிகள் தனது முயற்சிக்கு ஆதரவளிப்பதாக ஜாக்சன் கூறுகிறார். அவர் தற்போது நாடுகடந்த அரசாங்கத்தை (government in exile) நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.