இரா.கண்ணிமை
கிருஷ்ணன் விஷ்ணுவாய் அவதாரமெடுத்திருந்த காலத்தில் தான் பத்து அவதாரம் எடுத்ததாய் கதை.
மச்ச அவதாரம்
பிர்மதேவன் சோர்வினால் தூங்கிக் கொண்டிருந்தபோது, பிர்ம தேவனின் வேதங்கள் பிர்மாவை விட்டுக் கடந்து நடந்து போகவே, அய்க்கிரீவன் சோமுகாசுதன் என்னும் ராட்சதன் கையில் சிக்கி வேதங்களை, கடலில் கொண்டு போய் ஒளித்து வைத்துக் கொண்டதைப் பார்த்த விஷ்ணு மச்ச அவதாரமெடுத்துப் போய், ராட்சதனைக் கொன்று, வேதத்தை மீட்டு வந்து பிர்மாவிடம் கொடுத்தானாம். அதனை விளக்கும் ஒரு பாடல்:
“குளத்து மீனாகிஓட வேண்டிய தேன்
கொண்டுபோ யொழித்த காரணத்தால்
கூடுதலே தாகிலும் மரக்கணுக்குண்டோ?
கும்மிடு குலத்து மாணவர்கள்
இசைவிலா துரைத்த புரட்டுகளெல்லா
மிட்டபடி நிலையிலா தலைய
விச்சூரன் திருமாளருவரைப் பணிந்தா
வேகனைத் தொழுவதாயிடுமோ?
பொருள்: விஷ்ணு நீரில் வாழும் மீன் உருவெடுத்து நீந்தி ஓட வேண்டியதென்ன? ஆழியில் வேதத்தைத் திருடி ஒளித்தால், அசுரனுக்குப் பயன் அதனால் உண்டோ? பொழுது போற்றும் மாணவர் இசைவின்றி உரைத்த புரட்டுரை அஸ்திவாரமின்றி அலைந்ததே, சிவன் விஷ்ணுவெனும் இரு மனிதரைப் பணிவது ஏன்? இதையே விளக்கும் மற்றொரு பாடல்:
இமையில்லாவிழி மச்சரூப முதலிலானகுத்துக்
கடல் வீழ்ந்தான்
அடுத்துச் சலத்தில் வாழ்ந்தான்
தமியாய் மீனைவனைத்
தேவனென வுரைத்தால் சகலருநகையாரா
அகிலமே நம்புவாரா?
பொருள்: விஷ்ணு இமையிலாக் கண்களுடைய மீனுருவெடுத்துக் கடலில் விழுந்தான். இம்மீனுருவில் பிரம்மா நித்திரை விட்டெழும் வரை துள்ளிப் பாய்ந்து ஓடி விளையாடி தேடித் திரிய ஆசை கொண்டு மீனுருவெடுத்தோனைத் தேவன் என்றால் நகைக்க மாட்டார்களா? இதை உலகோர் நம்புவார்களா? என்பதாம்.
பாகவத புராணத்தில் எழுதியிருப்பது பிர்மாவுக்கு பகல் ஒழிந்து இரவு ஆனதே தூங்கியபோது உண்டான நிகழ்வுகளுக்கு சப்தரிஷகளும், சத்தியவத்தனும், தப்பிக் கொள்ள சிறீஅரி அனுப்பிய படகை விஷ்ணுவாகிய சிறீஅரியே மச்சமாயிருந்து காத்துக் கொள்ளுகையில் – அய்க்கிரீவன் என்னும் ராட்சதன் வந்து, பிர்மா தூங்கும்போது வேதத்தைத் திருடிக் கடலில் ஒளித்து வைத்தான். அதை அறிந்து – அதைப் பறித்துக் கொண்டு அவன் உயிரையும் அழித்தான் என்று எழுதியிருப்பதேயல்லாது – விஷ்ணு மச்ச அவாரம் எடுத்ததாய்க் காணோம். இது விஷ்ணு மச்ச அவதாரமெடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதுமன்றி – விஷ்ணு தெய்வமல்ல என்பதையும் விளக்குகிறது.
விஷ்ணுவின் மச்ச அவதாரத்தின் நீளம் நூற்நூற்ற யோசனை தூரம் – மெல்லிய புல்லும், நீண்ட மீசையும், குட்டை வாலும், சிறகும் – தரையைப் பார்த்த கண் களுமுள்ள உருவமாய்ச் சென்று ராட்சதனைக் கொன்று வேதத்தை மீட்டதாகச் சொல்லப்பட்டிருக் கிறது. (பாகவதம் 8ஆம் ஸ்கந்தம் – மச்ச அவதார அத்தியாயம் – 4 முதல் 12 பாடல் வரை காணலாம்)
இது உண்மையானால் பூமி சாத்திர ஆய்வுப் படி, பூமியும் – கடலும் சேர்த்து மூவாயிரம் யோசனை பரப்பு உள்ளதென்று – வல்லுநர்கள் குறித்திருக்கும் போது விஷ்ணுவின் மச்ச உருவம் எந்த இடத்தில் இருந்திருக்கும் என்பதை அறிவார்களா? இத்தகு காரணத்தால் – விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை ஆதாரமற்றதென்று விளக்குகிறது.
கூர்ம அவதாரம்
தேவர்கள் அனைவரும் பலி, மற்றுமுள்ள ராட்சதர் கையில் சிக்கி பெரும் துன்பமடைந்து அவதிப்பட்டு – ராட்சதர்களை வெல்ல சக்தியற்றிருந்தார்களாம். இராட்சதர் – தேவர்களை வெல்லாதிருக்க மந்திரகிரி மலையை வெட்டிப் பெயர்த்து கடலிற்கு எடுத்துச் செல்லும்போது சிலர் களைத்தும், நொந்தும், சாய்ந்தும் விழுவதைக் கண்ட விஷ்ணு கருடன் மீதேறி வந்து தேவர்களுக்கு உதவியாய் மந்திரகிரிமலையை தூக்கி தயிர் சமுத்திரத்தில் வைக்கவும் – தேவர்கள் கூடி இம்மலையை மத்தாக நாட்டி சந்திரனை தூணாய் (மத்தின் காம்பு) நிறுத்தி, ஆதிசேடனென்னும் வாசுகி பாம்பை கயிறாகச் சுற்றி கடைந்தார்களாம். கயிறாய் நின்று அலுவல் புரிந்த ஆதிசேடன், தாங்க முடியா வருத்ததால் – தன் நஞ்சைக் கக்கி – அமிர்தம் நஞ்சாக மாறி தேவர்கள் மயங்கி விட்டார்களாம். மந்திரகிரியும் கடலில் மூழ்கி விட்டதாம். தேவர்கள் விஷ்ணுவை நோக்கி வணங்கவே அதில் கலந்த நஞ்சை சிவன் தன் நெஞ்சில் நிறுத்திக் கொண்டதால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் பெயர் வந்ததாம். பிறகு பாற்கடலைக் கடைய அமிர்தம் வந்து அதில் ஏழு தேவர்களும் – லட்சுமியும் – பிறக்கவே விஷ்ணு லட்சுமியை திருமணம் செய்துக் கொண்டதாய் சொல்லப்பட்டிருக்கிறது
இதுவன்றி – விஷ்ணு தேவர்களுக்கு அமிர்தம் பங்கிடும்போது- தேவர்களுக்கும் ராட்சதர்களுக்கும் சண்டை மூண்டு வழக்காடுகையில் ராட்சதர்க்கு அமிர்தம் இல்லாமல் செய்யும் நோக்கமாய் – ராட்சதர் தன்னை மோகித்து இச்சிக்கத்தக்க அழகு நிறைந்த பெண்ணுருவாய் விஷ்ணு மாறி நிற்கவே – ராட்சதர் அமிர்தத்தை மறந்து மோகினியை வசப்படுத்த ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று மாண்டார்களாம். நாரதர் கைலாயத்திற்குச் சென்று நடந்தவற்றை சொல்லக் கேட்ட சிவன் பார்வதியோடு வந்திறங்கி விஷ்ணுவின் மோகினி உருவைப் பார்க்க மிகுந்த ஆசைப்பட்டானாம். உடன் விஷ்ணு மோகினியாய் மாறி – தாசி – வேசிகள் செய்திராத மோக விகாரமூண் டலுக்கும் காதல் சேட்டைகளைக் காட்டவே – பார்வதி பார்க்க வெட்கத்தையிழந்து காமச்சுவாலையில் சிக்கிய சிவன் மோகினியைத் தொடர்ந்து துரத்திச் சென்றானாம். இருவரும் புதரில் ஓடி ஒளிந்துகூடிப் புணர்ந்ததில் – அங்கே சன்னதேவனும், வயிரதேவனும் பிறந்தார்களாம். (இது பாரதம் எட்டாம் சல்லாபத்தில் சுபயோகி என்ற ரிஷி சொன்னது).
இந்த நிகழ்வில் ஈஸ்வரனான சிவனையும், திருமால் என்னும் விஜ்ணுவையும் பற்றி விளக்கம் பாடல்:
அதிதியின் மக்கணார் களுக்கொப்ப
யழிவுறாத் தற்கமுதருள
வரிசிவன் பிர்மா இனிமையவர் கூட்ட
மருந்தவ மிழைத்திடு முனிவர்
திதியினின் மைந்தர் சுரருங்கூடி
சிறந்த மந்திரகிரி மத்தாய்த்
திருப்பாற்கடலைக் கடைந்த நாளந்தத்
திகிரியைக் கூர்மமாய்த் திருமால்
முதுகுமேற் சுமந்து காம்பு சுந்திரனு
முடிமிசைப் புவியினைத் தாங்கு
முருகுதமிழ் சேடன் கயிறுமாயிருந்தால்
மொழியு வீரப் பொழுதுலகம்
இதிபெறச் சுமந்து காத்ததியார்வ
ரெழவிலை யியம்புதற் கென்றா
லிச்சுரன் திருமாலிருவரைப் பணிந்தா
வேகனைத் தொழுவதா யிடுமோ?
பொருள்: காசிப ரிஷியின் மக்களான தேவர்கள் மனிதரைப் போல் செத்தழியாது பிழைக்கவும், பலமாய் போர் புரியவும் – எதிரியை வெல்லவும் அவசியமான அமிர்தத்தை தேவர்களுக்குத் தர – திரிமூர்த்திகளும் – முப்பத்து முக்கோடி தேவர்களும், தவமுனிவர்களும், காசிபரிஷியின் மற்ற மனைவி, திதிக்குப் பிறந்த அசுரரும் கூடி திருப்பாற்கடலைக் கடைந்த நாளில் மந்திரகிரிமலை மத்தும் – சந்திரன் மத்தின் காம்பும் – பூமியைத் தன் தலைமேற் சுமந்து தூக்கிக் கொண்டிருந்த ஆதிகேசன் பாம்பு அந்த மத்துக்காம்பை சுழற்றும் கயிறுமாயும் விஷ்ணு, ஆமை (கூர்மம்) அவதாரத்தில் மந்திர கிரியை தன் முதுகின்மேல் தாங்கி சுமந்து கொண்டிருந்ததும் உண்மையானால் இவ்வகை உபதேசம் உலகில் உறுதியாய் நீடிக்க- அப்பொழுது ஆதிசேடனுக்குப் பதிலாய் பூமியைச் சுமந்து – தாங்கிக் கொண்டிருந்தது யார்? – இதற்கு விளக்கம் தர முடியாதென்றால் உறுதியற்ற பேச்சை நம்பி – விஷ்ணு, சிவன் என்ற இரு மனிதர்களையும் தொழுவது எப்படி?
வராக அவதாரம்:
கனகராட்சசன் என்ற அசுரனான இரணிய ராட்சதனை கொல்லுவதற்காய் – விஷ்ணு நீண்ட பற்களையுடைய பெரும் பன்றி அவதாரத்தில் பிறந்து – அண்டமெல்லாம் நடுங்க நுனி மயிரை சிலுப்பி உதறிக் கொண்டு முசுமுசுவென்றும், கரகரவென்றும் நெருப்புப் பொறி சிதற -வாலைச் சுற்றிக் கொண்டு தன் கொம்பினால் தண்ணீரைக் கிழித்து பூமியைத் தேட தேவர்களுக்கு இடுக்கண் செய்த மிகப் பெரிய பலம் நிறைந்த கனகராட்சச அசுரன் இதைக் கண்டு சிரித்து” ஏ முகுந்தா நான் பாயாய்ச் சுருட்டி ஒளித்து வைத்த பூமியை எடுத்து போக வந்தாயா? என்றான் அசுரன். பன்றி உருவில் நின்ற விஷ்ணு தன் பல்லால் அசுரன் வயிற்றைக் கிழித்துத் தள்ளினான். பிறகு – அமிழ்ந்து கிடந்த பூமியை மேலே கொண்டு வந்து வைத்து, பூமியிலிருந்த பன்றிகளை மோகித்து கூடிப் புணர்ந்து குட்டிகளை ஈன்றான்.
விஷ்ணு பன்றி உருவில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பூமியைத் தேடியது உண்மையானால் ராட்சதன் பூமியை சுருட்டி ஒளித்து வைக்கையில் தண்ணீரையும் பூமியோடு சேர்த்து தானே பாயாய் சுருட்டியிருப்பான். பின் எந்தத் தண்ணீரைக் கிழித்து விஷ்ணு தேடினான் என்பது சிந்திக்கத்தக்கது. பூமியோடு தண்ணீரையும் சேர்த்து சுருட்ட முடியுமா? அது உண்மையானால் பூமியை பாய் போல் சுருட்டியபின் – ராட்சதன் அதன்மேல் நின்றிருந்தான்? இது மனித அறிவுக் கெட்டாத பொய்யுரை அல்லவா? சிந்தியுங்கள். ராட்சதன் ஆகாயத்தில் பறந்து கொண்டு சுருட்டினானா? எத்தனை எத்தனை கதையளப்பு பாருங்கள்.
கருடனை விஷ்ணுவின் வாகனமென்று விஷ்ணு மதித்து இன்று வரை கருட வணக்கம் செய்து வரும் போது- விஷ்ணுவின் வராக அவதாரத்தை மதித்து வராக தரிசனம் (பன்றி) செய்யத் தவறியதேன்? இது விஷ்ணு அவதாரத்தில் வந்ததை மறுக்கிறதல்லவா? பன்றியை தெய்வமாய் மனங்கூசாது வணங்குவ தெப்படி?
நரசிம்ம அவதாரம்
இரண்ணிய கசிபன் என்னும் அசுரன் பிரம்மனை நோக்கி பல காலமாய் தவம் செய்ய பூமி பாதாளம் சொர்க்கமென்னும் மூன்று உலகத்தையும் ஆளும் அதிகாரத்தையும் பெற்று – தேவர்களுக்கு மேலாய் தன் ஆட்சியில் அனைத்தையும் ஆண்டு வருகையில் தன் உடன் பிறந்தான் இரண்ய அரக்கனைக் கொன்ற காரணத்தால் – விஷ்ணுவின்மேல் கோபங் கொண்டு நாராயணன் என்னும் நாமம் – உலகில் எங்கும் வழங்காமல் தன் பெயரே வழங்க வேண்டுமென்று செய்து வருகையில் அவன் மகன் பிரகலாதன், தன் குரு ‘இரண்ணிய நம’ என்று கற்பித்ததை மறுத்து ‘ஹரிநம நாராயணா’ என்று சொல்வதைக் கண்ட இரண்ணியன் – மகனைக் கொன்றதாய் சொல்லப்பட்டி ருக்கிறது. பிர்மலோகம், ‘வைகுண்டம், கைலாயம் ஆகிய மூன்று உலகங்களையும் இரண்ணியனுக்குக் கொடுத்தது உண்மையானால் – மூன்று தேவரும் இரண்ணியன் ஆட்சியில் எங்கே இருந்தார்கள்? அக்காலத்தில் வாழ்ந்த சிவபக்தர்களுக்கும், விஷ்ணு பக்தர்களுக்கும் வைகுண்டம், கைலாயம் கொடுக்கப்பட்டது எப்படி? எங்கே?
சிருஷ்டிகர்த்தா – ஒருவனைத் தண்டிக்க எண்ணங்கொண்டால் – சிருஷ்டிப் படைப்புகளான மிருகம், பறவை, மீன், ஊர்வனவாகிய பிறவியின் அவதாரமெடுத்ததேயல்லாமல் வேறு வகையில் தண்டிக்க, முடியாதா? மனித உலகில் தேவர்கள் இவ்வித அவதாரத்தில் வந்து எந்த வகையில் அறிவை கற்பிக்க முடியும்? சிந்தியுங்கள்! இக்கதையின் முழு செய்தியும் பாகவதம் ஏழாவது ஸ்கந்தம் – இரண்ணியனைக் கொன்ற அத்தியாயம் – 80,83,84ஆம் பாடலையும் கம்பராமாயணம் யுத்த காண்டம் – இரண்ணிய வதைப்படலம் 126ஆம், 153ஆம் பாடலிலும் பாருங்கள்.
இப்படி விஷ்ணு பல அவதாரங்கள் எடுத்து – அசுரர்களைக் கொன்றதாக அவர்களாகவே புராணத்திலே எழுதி வைத்துள்ளார்கள். விஷ்ணு நரகா சூரனைக் கொன்ற நாள் தீபாவளியாம். பார்ப்பனர்கள் நம்மவரை மூளைச் சலவை செய்து இத்தகு பொய்ச் சடங்குகளை புகுத்தி வைத்துள்ளனர். இது பாமரனுக்கும் படித்த முட்டாளுக்கும் – புரியவில்லை. தேவ – அசுரப் போராட்டம் இன்று வரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. விஷ்ணுவின் திருட்டுச் செயல்களில் ஒன்றுதான் தீபாவளி – இந்தத் தீயக் கதையினை படித்துப் பாருங்கள். இனியும் தீபாவளியைக் கொண்டாடப் போகிறீர்களா? அசுரர்களின் எதிரிகளை தீயிட்டுக் கொளுத்தப் போகிறீர்களா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!