“கட்சியிலும் சங்கத்திலும் மோடியின் ஒன் மேன் ஷோவுக்கு எதிரான மனநிலை உருவாக ஆரம்பித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்கச் சுற்றி வந்தாலும், இந்தியாவுக்குப் போதுமான ஆதரவை முக்கியமான நேரங்களில் அவரால் திரட்ட முடியவில்லை. சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுடனான போர் மற்றும் போர் நிறுத்தம், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து, அதேநேரம்… இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க அதிபரின் தொடர் ஆணவப் பேச்சு… எதையும் கண்டிக்காமல் தொடர்ச்சியாக வெளியுறவிலும் சொதப்புகிறார் மோடி. நடப்பு நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் சரமாரிக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் அவர் திணறுவது கண்கூடாகத் தெரிகிறது. மோடி கட்டமைத்த பிம்பம், மெல்ல மெல்லச் சரியத்தொடங்குகிறது” என்கிறார்கள், தீவிர ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளே!
கடந்த மாதத்தில், ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “75 வயதை அடைந்துவிட்டாலே நீங்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். புதியவர்களுக்கு வழிவிட வேண்டும். இதைத்தான், ‘75 வயதில் உங்கள் கழுத்தில் சால்வைகள் விழுந்துவிட்டாலே, நீங்கள் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’ என பிங்லே அடிக்கடி நகைச்சுவையாகக் கூறுவார்…” என்று பேசினார். இந்தக் கருத்து, டில்லியின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது. வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி, தன்னுடைய 75-ஆவது வயதில் பிரதமர் மோடி அடியெடுத்துவைக்கும் நிலையில், ‘பிரதமரை மறைமுகமாக ஓய்வுபெற வலியுறுத்தித்தான், இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்’ என்று தேசிய அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனடியாக, “அவர் மோடியைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. பொதுவாகத்தான் சொன்னார்…” என பா.ஜ.க வட்டாரங்களிலிருந்து விளக்கமெல்லாம் வந்தன. ஆனால், டில்லியில் நடப்பதையெல்லாம் பார்த்தால், மோகன் பகவத்தின் கருத்து போகிற போக்கில் சொல்லப்பட்டதல்ல என்றே தோன்றுகிறது.
“ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பனிப்போர் உச்சமடைந்திருக்கிறது. மோடியின் வளர்ச்சியை, தங்களுடைய கட்டமைப்புக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் தொடர்பில் உள்ளவர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு, மோடிக்கும் அமித்ஷாவுக்கும் விசுவாசமானவர்களெல்லாம் ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் முக்கியப் பொறுப்புகளைப் பெறுகிறார்கள். அதை நாக்பூர் தலைமை துளியும் ரசிக்கவில்லை. இவர்களுக்கு இடையேயான பனிப்போரால்தான், பா.ஜ.க தேசியத் தலைவர் நியமனத்தை, இன்று வரையில் செய்ய முடியவில்லை” என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.
“ஆர்.எஸ்.எஸ் எங்களுக்குத் தேவையில்லை..!’
டில்லியிலும் நாக்பூரிலும் உள்விவகாரங்களை அறிந்த பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “ஆர்.எஸ். எஸ்-ஸுக்கும் மோடிக்கும் இடையேயான மோதல், இன்று புதிதாகத் தொடங்கி விடவில்லை. ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த நெருப்புதான், தீ ஜுவாலையாக இப்போது எரிகிறது. 2014-இல் பிரதமரானவுடன், ஆர்.எஸ்.எஸ். தொடர்பிலுள்ள சீனியர்களை ஓரங்கட்ட, ‘மார்க்தர்ஷக் மண்டல்’ என்றொரு அமைப்பைக் கட்சிக்குள் உருவாக்கினார் மோடி. அதாவது, ’75 வயதுக்கு மேலானவர்களெல்லாம் கட்சியின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என்ற கோஷத்தை அவர்தான் முன் வைத்தார். அந்த ‘மார்க்தர்ஷக் மண்டல்’ அமைப்பில், மேனாள் பிரதமர் வாஜ்பாய், சீனியர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை உறுப்பினர்களாக்கி, கட்சிக்குள் அவர்களுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்தார்.
கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் மோடியின் பிம்பம் சரிவைச் சந்தித்திருப்பதை, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளே ஒத்துக் கொள்கின்றன. 2029 தேர்தலில் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால். சரிவைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாக நாக்பூரிலும் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
சங்கத்திலேயே மோடிக்கு ரசிகர் பட்டாள மிருந்ததால், அவரை எதிர்த்து கேள்வி கேட்க அப்போது ஆளில்லை. பா.ஜ.க தேசியத் தலைவராக இருந்த அமித்ஷாவும், பிரதமர் மோடியும் வைப்பதுதான் கட்சிக்குள் ராஜ்ஜியமாக உருவாகத் தொடங்கியது. ஆனாலும், மோடியின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், ஆனந்த்குமார். நிதின் கட்கரி, வெங்கைய நாயுடு போன்ற சீனியர்கள், இரட்டையர்களின் அதிகாரப் பரவலுக்குக் கடிவாளமாக இருந்தார்கள்.
2017-க்குப் பிறகு, நிலைமை மாறத் “தொடங் கியது. மோடிக்குக் கடிவாளமாக இருந்த சீனியர்கள் பலரும், வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தார்கள். மிச்சமிருந்த வர்களும் ஒதுங்கிக்கொள்ள, மோடி அமித்ஷா கூட்டணி, கட்சியையும் ஆட்சியையும்தங்களின் முழு கன்ட்ரோலுக்கு எடுத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அமைச்சரவையைத் தன் இஷ்டப்படி அமைத்தார் மோடி. அமித் ஷாவுக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. ஹர்தீப் சிங் பூரி, ஆர்.கே.சிங், ஸ்மிருதி இரானி, அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர் என மத்திய அரசுப் பணி அதிகாரிகளாகவும், திரை நட்சத்திரங்களாகவும் இருந்து ஓய்வுபெற்றவர்களை, அமைச்சரவைக்குள் நியமித்தார் மோடி. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஆர். எஸ்.எஸ் அமைப்பின் சீனியரான ராம் மாதவ்வை ஓரங்கட்டினார். ‘தேசம் முதன்மை யானது. கட்சி இரண்டாவது. தனிநபர் விருப்பம் மூன்றாவது’ என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைக் கொள்கை. அதைத் தூக்கி எறிந்துவிட்டு, ‘மோடி, மோடி, மோடி…’ எனத் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் பிரதமர். இதையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் சுத்தமாக ரசிக்கவில்லை.
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது, அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கடுமையாக ‘ஈகோ’ மோதல் வெடித்தது. யோகிக்கு எதிராக உள்ளடி வேலைகள் கட்சிக்குள்ளேயே நடந்தன. அதையும் சங்கம் விரும்பவில்லை. அதற்கெல்லாம் உச்சமாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு ஆங்கிலப் பத்திரி கைக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. ‘நாங்கள் இப்போது வளர்ந்துவிட்டோம். பா.ஜ.க-வுக்கு, ஆர்.எஸ்.எஸ்-ஸின் தயவு தேவையில்லை…’ என்று கூறியது, சங்கத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களைக் ‘கொதிப்படையச் செய்தது. ‘சங்கத்திலிருந்து உருவானதுதான் இந்தக் கட்சி. நமது தயவில்லாமல் வெற்றிபெற்று விடுவார்களா..?”. என மோடிக்கு எதிராக, சங்கத்திலிருந்து முதன்’ முறையாகக் கலகக்குரல்கள் ஓங்கி ஒலித்தன.
“இது மோடி கட்சியல்ல…’ ஆர்.எஸ்.எஸ் Vs மோடி!
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளில், தன் ஆதரவாளர்களை 37 தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக்கினார் அமித் ஷா. யோகியை அழைக்காமலேயே, உ.பி-யின் மற்ற அமைச்சர் களை மட்டும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் கடுப்பான ஆர்.எஸ்.எஸ் ஆட்களும், யோகியின் ஆதரவாளர்களும் தீவிரத் தேர்தல் பணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டனர். விளைவு… அந்தத் தேர்தலில் வெறும் 33 இடங்களில் மட்டுமே உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்றது பா.ஜ.க. அவரது தொகுதியிலேயே ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் அடி வாங்கினார் மோடி. இப்படியான சூழலில்தான், தனி மெஜாரிட்டிகூடப் பெற முடியாமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில் மைனாரிட்டி அரசாங்கம் அமைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் மோடி. இதில், அவரது பிம்பம் சுக்கு நூறாக நொறுங்கியது.
இப்படி, கட்சிக்குள்ளும் சங்கத்திலும் கடந்த 11 ஆண்டுகளாக நிலவிவந்த மனக்கசப்புகளும் பூசல்களும்தான் இப்போது பூதாகரமாக வெடித் திருக்கின்றன. பா.ஜ.க தேசியத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அல்லது சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவை தேசியத் தலைவராகக் கொண்டுவா முயல்கிறது மோடி – அமித் ஷா கூட்டணி. தங்களுக்குத் தோதான ஆள் அதிகாரத்தில் அமர்ந்துவிட்டால், நட்டாவை ஆட்டுவித்தது போல, புதியவரையும் ஆட்டுவிக்கலாம் எனத் திட்டமிடுகிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்குக் கட்சியில் பணி நீட்டிப்பு வழங்க, காய்நகர்த்துகிறார்கள். ஆனால், இவர்கள் தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒரு பொம்மையின் கையில் கட்சியைக் கொடுக்க சங்கம் தயாராக இல்லை. ‘இது மோடியின் கட்சியல்ல… என்பதை அழுத்தமாகச் சொல்லத் தயாராகிறது சங்கம். அதன் எதிரொலிதான், ‘75 வயதில் ஓய்வுபெறுங்கள்’ என்கிற கோஷம்.
வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியுடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு 75 வயது ஆகிறது. அதையொட்டி, தன் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டிருக்கும் மோகன் பகவத், புதியவர்களுக்கு வழிவிடத் தயாராகிறார்.அவர் ராஜினாமா செய்துவிட்டால், மறைமுகமாகப் பிரதமருக்கும் அழுத்தம் உருவாகும். அதற்குண்டான வேலைகள் நடக்கின்றன. அய்ந்து வருடங்களாக, ஓரமாகஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ராம் மாதவ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதுவே, கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ்-ஸின் கை மேலோங்கி வருவதற்கான சிக்னல்தான். பிரதமர் பொறுப்பிலிருந்து மோடி விலக்கப்பட்டால், நிதின் கட்கரி, தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவராஜ் சிங் சவுகான் எனத் தங்களுக்குத் தோதான ஒருவரைப் பிரதமராக முன்னிறுத்தத் தயாராகிறது. ஆர்.எஸ்.எஸ். அவர்களின் முயற்சி எந்த அளவுக்கு எடுபடும் என்பது போகப் போகத்தான் தெரியும்” என்றனர் விரிவாகவே.
தோல்வியடைந்த வெளியுறவுக் கொள்கை…
சரிகிறதா மோடி பிம்பம்?
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘மோடியின் கேரன்டி’ என்ற தலைப்பில்தான் தேர்தல் பிரசாரத்தையே முன்னெடுத்தது. பா.ஜ.க. அப்போதே, ‘இது தனிநபருக்கான இயக்கமல்ல…’ என ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எச்சரித்தனர். ஆனால், மோடி வகையறாக்கள் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. தட்டுத் தடுமாறி ஆட்சியமைத்திருக்கும் சூழலில், மக்கள் “உங்கள் கேரன்டியை ஏற்றுக்கொண்டிருந்தால், உங்களுக்குத் தனி மெஜாரிட்டி அளித்திருப்பார்கள். ஆனால், இந்த முறை அதை அளிக்கவில்லை என்றபோதே, உங்களை ஏற்கவில்லை என்று தானே அர்த்தம்?” எனக் கொடிபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். கட்சிக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும் மோடியின் பிம்பம் சரியத் தொடங்கிவிட்டதாகத்தான் சொல்கிறார்கள் சீனியர் அதிகாரிகள்.
மத்திய அரசுப் பணியிலுள்ள சீனியர் அய்.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பேசுகையில், “இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே செய்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ‘இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்… இந்தியப் பொருளாதாரம் செத்துப்போய்விட்டது’ எனத் தொடாச்சியாகப் பேசுகிறார்.பாகிஸ்தானின் தீவிரவாத மய்யங்கள்மீது இந்தியா தாக்குதல் நடத்திவந்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது அய்.எம்.எஃப் நிதி அமைப்பு. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனிருக்கு, வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கிறார் அமெரிக்க அதிபர். அவரைக் கண்டித்து, பிரதமர் மோடியால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை என்பது, அப்பட்டமாக மோடியின் பிம்பத்தில் விழுந்த பெரிய கீறல்தான்.
அய்.நா பாதுகாப்பு கவுன்சிலில், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குப் பெரிய தோல்வி. ஏற்கெனவே, ‘சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மோடி எதுவும் பேசுவ தில்லை’ என்ற அவப்பெயர் இருக்கிறது. இப்போது, ‘பாகிஸ்தானுக்கு எதிராகக்கூட அவரால் எதுவும் செய்ய முடியவில்லை, அமெரிக்காவிடம் கைகட்டி நிற்கிறார்’ என்பதால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களே மோடியின் வெளியுறவுக் கொள்கையை ரசிக்கவில்லை. 2014-இல் இருந்த மோடியின் பாப்புலாரிட்டி இப்போது இல்லை. அவரது பிம்பம் சரிவைச் சந்தித்துவருவது உண்மைதான்” என்றனர் அழுத்தமாக.
நம்மிடம் பேசிய மேனாள் ஒன்றிய அமைச்சர் ஒருவர், “கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் தன்னுடைய அதிகாரத்தை, படிப்படியாக நிறுவிக் கொண்டவர் மோடி. தனக்கெதிராக யாரெல்லாம் எழுந்து வருவார்கள் எனச் சந்தேகமிருக்கிறதோ, அவர்களின் அதிகாரத்தை அடியோடு அழித்தவர். மோடியின் தந்திர அரசியலிலிருந்து தப்பி, மகாராட்டிரா முதலமைச்சராக ஆவதற்கு, தேவேந்திர ஃபட்னாவிஸுக்குப் பல ஆண்டுகளானது. 75 வயதானாலும் சரி, தன்னுடைய இருக்கையை விட்டுத்தர மாட்டார் மோடி. அதேசமயம், அவர் வீக்காக இருக்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் தங்களுடைய அதிகாரத்தை மீட்டெடுக்க முயல்கிறது
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஒருவரைக் கொண்டுவர முயல்கிறார்கள். இந்த ஆடு, புலி ஆட்டத்தில்மோடி வீழ்த்தப்பட்டால் மட்டுமே, தங்களுக்கு எதிர்காலம் இருக்கும் எனக் கருதுகிறது சங்கம். ஆனால், 2029 தேர்தலிலும், அதற்குப் பிறகு தான் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் அதிபர் ஆட்சி முறையிலும் தன்னையே முன்னிலைப்படுத்த விரும்புகிறார் மோடி. இவர்களின் அரசியல் விளையாட்டுக்கான விடை, செப்டம்பர் இறுதிக்குள் தெரிந்துவிடும்” என்றார்.
கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் மோடியின் பிம்பம் சரிவைச் சந்தித்திருப்பதை, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளே ஒத்துக்கொள்கின்றன. 2029 தேர்தலில் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால். சரிவைச் சந்திக்க வாய்ப் பிருப்பதாக நாக்பூரிலும் குரல் ஒலிக்கத் தொடங்கி யிருக்கிறது. ஆனால், மோடியின் கணக்கோ வேறாக இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆள்வதற்கான கனவை நோக்கி நகர்கிறார் அவர். இந்த அரசியல் விளையாட்டில், யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதில் இருக்கிறது ‘பரபர’ இந்திய அரசியல்!
நன்றி: ‘ஜூனியர் விகடன்’ 10.8.2025