சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணப் பதிவுகள் அடிப்படையிலான ‘குற்றம் மற்றும் பாதுகாப்பு’ தொடர்பான ஆய்வில், இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான நகரமாக அகமதாபாத் முதலிடம் பிடித்திருப்பது பெரும் வியப்பையும், நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்ப்பூர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சென்னை முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.
இந்தப் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே, அகமதாபாத் நகர காவல்துறை ஆணையர் அலுவலகம் நகரின் முக்கிய பகுதிகளில் சர்ச்சைக்குரிய பதாகைகளை வைத்தது, இது ‘பாதுகாப்பான நகரம்’ என்ற கூற்றை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. அந்தப் பதாகைகளில், “பெண்களே, இரவு கேளிக்கை விருந்து (பார்ட்டி)களுக்கு செல்லாதீர்கள், நீங்கள் கற்பழிக்கப்பட –கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவோ நேரிடும். உங்கள் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்குச் செல்ல வேண்டாம்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒருபுறம், நாட்டின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம்! மறுபுறம், அதே நகரத்தின் காவல்துறை, பாலியல் குற்றங்களைத் தவிர்க்க பெண்கள் இரவில் தனியாக வெளியே வர வேண்டாம் என்றும், ஆண்களுடன் இருண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வெளிப்படையாக எச்சரிப்பது கேலிக்குரியதே! நகரின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த முரண்பாடு, ‘பாதுகாப்பான நகரம்’ என்ற பட்டியலில் அகமதாபாத்திற்கு அளிக்கப்பட்ட இடத்தை கேள்விக்குறியாக்குகிறது.
இதற்கு நேர்மாறாக, 2024 ஆம் ஆண்டு வெளியான பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் படிக்கும் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களில் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. சென்னை இரண்டாம் இடத்திலும், கோவை மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில், பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சி, மற்றும் அய்தராபாத் என நான்கு தென் இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த ஏழு நகரங்களுமே பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சி செய்யாத மாநிலங்கள் என்பது நினைவில் இருக்கட்டும்!
பாஜக ஆளும் மாநிலங்களுக்காக நாட்டின் ஒட்டுமொத்த அமைப்புகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு, அகமதாபாத் விவகாரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! தரவுகள் மற்றும் கள யதார்த்தங்களுக்கு இடையே உள்ள இந்த வெளிப்படையான முரண்பாடு, அரசு அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது.
பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்பூரில் என்ன நடந்தது? வெட்கித் தலைக் குனியும் நிலையல்லவா!
பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு மானுடம் தலைகுனியவில்லையா?
காஷ்மீரில் கத்துவா பகுதியில் நடைபெற்ற கொடூரம் சாதாரணமானதா? எட்டு வயதே நிறைந்த முஸ்லிம் சிறுமி அசிஃபானு ஒரு கோயிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பல நாள்கள் வன்கொடுமை செய்யப்பட்டு, கடைசியில் கொலையும் செய்யப்பட வில்லையா? குற்றவாளிகளில் காவல் துறையினரும், அர்ச்சகர்களும் உண்டு என்பது பெரும் வெட்கக் கேடே!
பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உடையவர்கள் என்பதுதானே பா.ஜ.க. சங்பரிவார் போற்றும் மனுதர்மத்தின் கூற்று (அத்தியாயம் –9 –சுலோகம் 19).
பா.ஜ.க.வின் பசப்பு வார்த்தைகளைக் கண்டு மயங்காதீர் – அது ஒரு பாசிசம் – பச்சை இலையில் பதுங்கி இருக்கும் பாம்பு! எச்சரிக்கை!