முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்கள் வெளியீடு!

3 Min Read

கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் – கலைஞர் நிதி நல்கை திட்டங்களைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக. 8 – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி“கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தைத் தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் பதிப்ப கத்தின் 8 புதிய நூல்களை கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி நேற்று (7.8.2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட்டு, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களை வெளியிட்டார்.

இலச்சினை வெளியீடு!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான நேற்றையதினம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட, மூத்த பத்திரி கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், கலைஞர் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தின் இணைய தளமும் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இளம்தலைமுறையினர் சிறந்த பத்திரிகையாளராக பயிற்சி பெறவும், திராவிட இயக்கத்திற்கும், சமூகத்திற்கும் தொண்டாற்றிட வழிகாட்டியாகவும் விளங்கும்.

இளம் ஆய்வாளர்கள்
15 பேருக்கு தலா ரூ.1 லட்சம்!

அதைத்தொடர்ந்து, திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “கலைஞர் நிதிநல்கை’’ திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்குஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

8 புதிய நூல்கள் வெளியீடு!

பின்னர், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தியாக மறவர்’ சி.சிட்டிபாபு அவர்கள் தொகுத்த “தி.மு.க வரலாறு”, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!’ – இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கட்டுரைகள், முனைவர் இரா. சபாபதி மோகன் அவர்கள் எழுதிய “மாநில சுயாட்சி முழக்கம்”, கோவி. லெனின் அவர்கள் எழுதிய “திராவிட இயக்க வரலாறு’’ கேள்வி- – பதில்”, தமிழன் பிரசன்னா எழுதிய“இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”, சூர்யா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிடமாடல்!”, சு.விஜயபாஸ்கர் எழுதிய “இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்” ஆகிய எட்டு புதிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ இராசா, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சி செய்திப் பிரிவுத் தலைவர் ப. திருமாவேலன், ‘முரசொலி’ நாளிதழின் செய்தி ஆசிரியர் கு.சேது, தி.மு.கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், தி.மு.கழக தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி. லெனின், தி.மு.க. தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் நிர்வாகி நீரை மகேந்திரன், மறைந்த எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் அவர்களின் மனைவி காயத்ரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *