இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உருவாகியிருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அபார சாதனை மட்டுமின்றி, தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி விகி தத்தைக் காட்டி, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி சில நாள்களுக்கு முன் வந்த நிலையில், ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள திருத்தப்பட்ட மதிப்பீட்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதத்தை இன்னும் அதிகரித்து 11.19 சதவீதமாக குறிப்பிட்டிருப்பது மேலும் பெருமை சேர்த்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியே 6.5 சத வீதம் என்றிருக்கும் நிலையில், அதைப்போல் இரண்டு மடங்கு வளர்ச்சியைக் காட்டியிருப்பதன் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கே தமிழ்நாடு தான் அச்சாணியாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
இந்த வளர்ச்சி விகிதத்தையும், மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2010-2011 காலகட்டத்தில் தமிழ்நாடு 13.12 என்ற இரட்டை இலக்க வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்திருந்ததையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் சுட்டிக் காட்டியுள்ளார். 14 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், இரண்டுமே திமுக ஆட்சியில் நடந்தது என்பது அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ள அக்கட்சிக்கு சாதகமான அம்சமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதே வேகத்துடன் தமிழ்நாடு நடைபோட்டு 2030 இல் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்ற உறுதியையும் முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். வெளிவந்துள்ள இந்த புள்ளிவிவரங்களில் கோவா, குஜராத், 4 வட மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த மட்டில், நாட்டின் வளர்ச்சியில் பிரதான இடங்களை வகிக்கும் மகாராட்டிரா, கருநாடகா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசம் – 8.99, ஆந்திரா – 8.21, தெலங்கானா – 8.08, கருநாடகா – 7.37, மகாராட்டிரா – 7.27 என அவையனைத்தும் தமிழ்நாட்டை விட குறைந்த சதவீத வளர்ச்சியையே எட்டியுள்ளன.
பொருளாதார வளர்ச்சியில் நம்முடன் போட்டியிடும் மாநிலங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று விட்ட தால், சதவீதம் வெளிவராத மாநிலங்களின் வளர்ச்சி குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரம், தனிநபர் வருவாயில் தமிழ்நாடு
3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயில் எதிரொலிப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மூன்று பேர் உள்ள வீட்டில் ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டுவதற்கும், 10 பேர் உள்ள வீட்டில் ரூ.1 லட்சம் வருவாய் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்றல்ல என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. நாட்டில் தனிநபர் வருவாயும் உயரும் வகையில் அமையும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே உண்மையான வளர்ச்சியாக அமையும்.
நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 7.8.2025