திண்டிவனம், ஆக. 7- டாக்டர் ராமதாஸ் வீட்டு தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் மனு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலோடு அவரது உதவியாளரும், பா.ம.க. செய்தி தொடர்பாளருமான சுவாமிநாதன் நேற்று முன்தினம் (5.8.2025) விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் துணை கண்காணிப்பாளருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வசித்து வரும் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார் என்பவர் மூலம் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் இணைய சேவை (வை-பை) கொடுத்தனர்.
மேலும் கண்காணிப்புக் கருவியும் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் டாக்டர் ராமதாசின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியில் உள்ள நபர்களுக்குத் தெரிந்து வந்தது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் தனியார் நிறுவனம் மூலம் டாக்டர் ராமதாசின் வீட்டில் இருந்த இணைய சேவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ராமதாஸ் வீட்டில் இருந்த தொலைபேசி ‘போர்ட் பார்வர்டிங் மெத்தடு’ முறையில் வெளியில் உள்ள நபர்களுக்கு மாற்றம் செய்து அதன் மூலம் சென்னையில் உள்ள நபர்கள் தகவல்களை சேகரித்துள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளோம்.
இணைய சேவை மோடம்…
எனவே டாக்டர் ராமதாஸ் வீட்டின் தொலைபேசியை ‘ஹேக்’ செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இணைய சேவை மோடம் காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. ஏற்கெனவே தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டிருந்தது என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தனது வீட்டில் இருந்த தொலைபேசியை சிலர் ஹேக் செய்துள்ளனர் என டாக்டர் ராமதாஸ் மற்றொரு புகார் அளித்துள்ளார். இது பா.ம.க.வினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாய்ப்பே இல்லை
தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ள புகார் குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், தொலைபேசியை ஹேக் செய்வதற்கான வாய்ப்பே இல்லை. இருப்பினும் தொழில்நுட்ப முறையில் மோடத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வுசெய்ய உள்ளோம். ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே உண்மை தெரியவரும். மேலும் ‘அய்.பி’ முகவரியை கொடுக்கும்பட்சத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதை மற்றவர்கள் யாரேனும் கண்காணித்துள்ளார்களா?, என்பதை கண்டறிய முடியும் என்றனர்.