சென்னை, ஆக.7- சொத்துப் பதிவின் போது ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 587 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தினமும் 20 ஆயிரம் பதிவுகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இந்தநிலையில், ஒரு நில விவகாரம் தொடர்பான வழக்கில், ரொக்கமாக பண பரிவர்த்தனை நடைபெற்றதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
சுற்றறிக்கை
இதை கவனித்த உச்ச நீதிமன்றம், ஏன் ரொக்கமாக பணம் கொடுத்து பதிவு நடைபெறுகிறது? வருமான வரித்துறை சட்டப்படி ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடைபெற்றால், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
ஆனால் அப்படி தினமும் 20 ஆயிரம் பதிவுகளையுமே பதிவுத்துறையால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க முடியாத நிலைதான் தற்போது உள்ளது. அதேநிலைதான் நாடு முழுவதும் உள்ளது. அப்படியே அனுப்பினாலும், அந்த பட்டியல்களை சரிபார்த்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கும் போதுமான ஊழியர்கள் இல்லை.
இதுதொடர்பான நடைமுறை சிக்கல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அனைத்து சார்பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக ரொக்க பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்த பதிவு தொடர்பான விவரங்களை வருமான வரித்துறைக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதேபோல், பதிவு அதிகாரிகள் பதிவுக்கு வரும் ஆணவத்தில் ரொக்க பரிமாற்றம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பரிமாற்றம் குறித்த தகவல் இருந்தால், அது குறித்து வருமான வரித்துறைக்கு ஆவணத்தின் நகலுடன் தகவல் அளிக்க வேண்டும்.
கண்டிப்பாகப் பின்பற்றுக!
மேலும், பதிவுக்கு பின் தகவல் அளிக்கப்பட்டதற்கான அறிக்கை, ஆவணத்தின் நகல் ஆகியற்றை இணைப்பு பக்கமாக பாதுகாக்க வேண்டும். ஒரு வேளை பதிவு அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்காதது அல்லது காலம் தாழ்த்தியது தெரிந்தால், மாவட்ட பதிவாளர்கள் அது தொடர்பான அறிக்கையை மண்டல துணை பதிவாளர்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட மாவட்ட தணிக்கை பிரிவு பதிவாளர் பதிவுக்கு வரும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பதிவு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது தொடர்பான உரிய அறிவுரைகளை மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்கள் பதிவு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.