சென்னை, ஆக. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த 2024ஆம் ஆண்டு நவ.27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த முடிவில் 957 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த தேர்வு முடிவை எதிர்த்து சிலர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்ச்சி பெற்ற 957 பேருக்கு பணி ஆணை வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அவர்களுக்கான பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு
சென்னை, ஆக. 6- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் டி.கதிரேசன் கூறும்போது, “ஊதிய ஒப்பந்த பலனும் விரைவில் வழங்கப்படும் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் அக்.7ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!
ராமேசுவரம், ஆக.6- ராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களை கைது செய்தனர். மேலும் தொண்டியில் இருந்து நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களைக் காங்கேசன் கடற்படை முகாமில் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நீடித்து வருகிறது. இதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின்
வெளிநாட்டுப் பட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது
யுஜிசி எச்சரிக்கை
சென்னை, ஆக.6- விதிகளை முறையாக பின்பற்றாத மற்றும் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி பட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டை பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்-2022 யுஜிசியால் 2023 டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதே ஆண்டில் வெளிநாட்டு உயர்க்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் பல்வேறு உயர்க்கல்வி நிறுவனங்கள் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன.
அந்த நிறுவனங்கள், கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிடம் இருந்து பட்டங்கள் பெறுவதை எளிதாக்கி வருவதும் யுஜிசி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி சில தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சில வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இணையவழியில் பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை வழங்குவது தொடர்பாக செய்தித்தாள்கள், சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வழங்கி வருகின்றன.
இதற்கு எந்த அனுமதியும் யுஜிசியால் வழங்கப்படவில்லை. எனவே, அத்தகைய பட்டங்களும் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாது. இதுதவிர இத்தகைய செயல்களில் ஈடுபடும் உயர்க்கல்வி நிறுவனங்கள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் மாணவர்கள், பொது மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.