நேற்றைய (5.8.2025) தொடர்ச்சி…
இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்தரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடைமைப் பிரச்சாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப் பாருங்கள். இதுதான் எனது உண்மை.
ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் ‘‘புகழையும் வீரப்’’பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்துகொண்டாவது வேலை செய்வேனே ஒழிய
வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.
ஜெயிலில் எனக்கு என்ன கஷ்டம்? எ. கிளாசில் போட்டார்கள். இனியும் போடு வார்கள். 6 மாதமாவது ஜெயிலுக்குப் போனால்தான் என் உடம்பு இனியும் 2 வருஷத் திற்கு உழைக்க சௌகரியம் கொடுக்கும். நிற்க, இயக்கத்திற்காக ஆரம்பமுதல் இந்த நிமிடம் வரை யாரிடத்திலாவது கால் அணா வசூல் செய்திருக்கிறேனா? அல்லது இயக் கத்து தொண்டர்களுக்கு என் சக்தியனுசாரம் அவ்வப்போது உதவாமல் இருந்திருக் கிறேனா? என் குடும்பநிலை எவ்வளவு கஷ்ட நஷ்டத்திற்கும், கேட்டிற்கும் ஆளாகி விட்டது உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும், எனது எஸ்டேட்டும், வருவாய்களும் எப்படி நாசமானாலும் அவற்றை லட்சியம் செய்யாமல் இயக்கத்திற்கு என்னால் கூடியதைச் செய்யாமல் இருந்ததே இல்லை. பார்ப்பனர் தொல்லையால், அரசாங்க தொல்லையால் எனது குடும்ப வருவாய் 100க்கு 25 வீதமாய் விட்டது. இப்படி எல்லாம் ஆனது ஒருபுறமிக்க,
யாரை நம்புவது?
இன்று எந்தத் தோழர்களை நம்பி நான் துணிந்து ஜெயிலுக்குப் போக முடியும்? ஒரு வருஷம் அய்ரோப்பாக் கண்டத்திற்குப் போய் இருந்தேன். இயக்க நிர்வாக சபை அழிந்துவிட்டது. சென்ற வருஷம் 6 மாதம் ஜெயிலுக்குப் போனேன். மகாநாடு கூட்ட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுப் பிரசாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவுடைமை என்று சொன்னவுடன் பணக்காரர்கள் பறந்து விட்டார்கள்.
இந்த நிலையில் புத்திசாலித்தனமாய் காரியம் நடத்தாவிட்டால் இயக்கம் நடக்குமா? கடவுள், மதம், ஜாதி ஆகியவைகளால் மக்கள் அனுபவிக்கும் கொடு மையும் இழிவும் ஒழிய வேண்டாமா? ஏதோ இரண்டொரு ஆட்கள் அதுவும் சுயநல விஷயமாய் அபிப்பிராயபேதம் கொண்ட ஆட்களின் விஷமப் பிரச்சாரத்துக்கு பயந்து கொண்டு நான் வீரனாய்விட்டால் இயக்கம் போகும் கதி என்ன? எப்படியோ போகட்டும், நம் கடமையை செய்வோம் என்பதை எல்லா சமயத் திலும் முட்டாள்தனமாய் நான் பின்பற்றுபவனல்ல. ஆகின்ற அளவுக்கு காரியம் ஆகவேண்டும் என்று கருதுகிறேன். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால், அவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி நடக்க வழியில்லாமல் இல்லை.
இப்போதும் நம் கொள்கைகளில் சமதர்மமோ, பொதுவுடைமைத் தத்துவமோ இல்லை என்று சொல்ல முடியாது. சமதர்மத்துக்கும், பொதுவுடைமைக்கும் தோழர் ஜீவானந்தமும் அவர்களது தோழர்களும்தான் பாஷ்யக்காரர்கள் என்பதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது.
ரஷ்யப் பொதுவுடைமை எனக்கு நேரிலும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், பணக்கார ஆட்சியுடனும் ராஜி செய்துகொண்டு கூடுமான அளவுதான் சமதர்மம் நடத்துகிறார்களே தவிர, யாரோ ஒருவர் கோழை என்று சொல்லுவாரே என்று பயந்து கொள்ளவில்லை.
இவைகளையெல்லாம் உத்தேசித்தே சுயமரியாதை இயக்கத் திட்டம் இவ்வளவுதான் என்பதாக ஒரு வருஷத்துக்கு முன்பு (10-03-1935ல்) வெளிப்படுத்திவிட்டேன். அதன் பிறகே தாராளமாய் வேலை செய்ய முடிகிறது.
இதையும் தடுத்தால்
சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்டவிரோதம் என்று சொன்னால், அப்போது என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதற்கு நான் தாமதமில்லாமலும், வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால், உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல் கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும், பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால், அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் ‘‘புகழையும் வீரப்’’பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய, வீண் வீம்புக்கும், போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன். அறிவுள்ளவர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த அரசாங்கத்தை ‘I will ment or end’ என்று சொன்ன காந்தியார் கூற்று என்ன ஆயிற்று? “நாங்கள் 35 கோடி பேர்களும் நாய்களோ, ஈனப்பன்றிகளோ” என்று சொன்ன தேசாபிமானிகள், தேசிய வீரர்கள் கதி என்ன ஆயிற்று?
ஆட்டிடையன் ஆடுகளை பட்டிக்குள் விரட்டுவது போல், இன்று காந்தியாரே ‘‘தேசிய வீரர்களை’’ சட்ட சபைக்குள் போய் ராஜ பக்தியாயும், ராஜ விஸ்வாசமாயும் ராஜ சந்ததிகளுக்கும், ராஜாங்க சட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாகவும் சத்தியம் செய்து ‘‘மானங்கெட்டு, மரியாதை கெட்டு’’ திரியும்படி இப்போது விரட்டி அடிக்கவில்லையா?
அவ்வளவு கேவல நிலைக்கு
நாம் இன்னும் போகவில்லை
நமக்கு பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் ஆகிய 3 எதிரிகள் உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால் முறையாக, ஒவ்வொன்றாக ஒழிப்போம். இதற்காக நம்முடைய சுயநல வீரப்பிரதாபத்தில் கடுகளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? இதை உத்தேசித்தே என் தமையனாரை அரசாங்கத் தினிடம் ராஜத்துவேஷம் பரப்புவதில்லை என்று சொல்லி வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு விடுதலை அடையும்படி சொன்னேன். சர்க்காரின் நிலைமையையும், அவர்களது நடத்தையையும். சக்தியையும் யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். சர்க்கார் சக்தி லேசானதல்ல. உலகத்திலேயே சக்தியும், தந்திரமும் பொருந்திய சர்க்கார் பிரிட்டிஷ் சர்க்காராகும். மேடையில் கூப்பாடு போட நம்மை அனுமதித்து விட்டதாலேயே நாம் பெரியவர்கள். சர்க்கார் சின்னவர் என்று எண்ணிவிடக்கூடாது. எதிரியின் பலம் அறியாமல் வீரம் பேசுவது பொறுப்பை உணராததாகும். எப்பொழுது எதற்காக சர்க்காரோடு போராடுவோம் என்பது எனக்குத் தெரியும்.
காங்கிரசுக்காரர்கள் தொல்லையின் மீது சர்க்கார் கண்ணோட்டம் இருந்தபோது நம்முடைய பொதுவுடைமைப் பிரச்சாரத்தை அவர்கள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் தங்களுடைய சட்ட மறுப்பையும், மறியலையும். எதிர்ப்பையும் விட்டுவிட்டு ராஜவிஸ்வாசப் பிரமாண சரணாகதிக்கு வந்தபின்பு நம்மீது கண் வைத்தார்கள். 2, 3 கோடி ரூபாய் செலவு செய்து பல லட்சம் பேரை ஜெயிலுக்கு அனுப்பி புத்தி பெற்ற காந்தியாரையும். காங்கிரசையும் பார்த்தாவது நாம் புத்திசாலித்தனமாய் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாங்கள். எங்கள் குடும்பம் மாத்திரம் கெட்டு ஜெயிலுக்குப் போனதிலும் திருத்திக் கொள்ள முடியாவிட்டால் நாம் பைத்தியக்காரராகிவிட மாட்டோமா?
நம் தோழர்களின் யோக்கியதை யாருடை யது எனக்குத் தெரியாது? இயக்கத்தால் மனிதர் களானவர்களே தான் இன்று இயக்கத்தை செத்துப் போய் விட்டது என்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கியதை போய்விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருந்திருக்கும்? அவர்களுக்கு மேடையேது? என்று யோசித்துப் பார்க்கட்டும். ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால், நம் அபிப்பிராயம் தெரிவிக்க இன்று இந்த மேடை கிடைத்திருக்குமா?
பார்ப்பான் பின்னால் கொடியைப் பிடித்துக் கொண்டு வந்தேமாதரக்கோஷமும், காந்திக்கு ஜே! கோஷமும் போட்டால் ஒழிய, பலருக்கு சாப்பாட்டிற்கு ஆவது வழி கிடைத்திருக்குமா? நம்மிடம் வீரம் பேசிக்கொண்டு நம்மைக் கோழைகள் என்று சொல்லிக்கொண்டு போனவர்களின் வாழ்க்கை இன்று எப்படி நடக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் பணம் வாங்கினார்கள்? யாரை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்? யார் நிழலில் அவர்கள் வாழ்கிறார்கள்? எந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்தார்கள்? அவரவர்கள் பணம் செலவு செய்து எலக்ஷனில் ஜெயிக்கிறார்கள், உத்தியோகம் அனுபவிக்கிறார்கள். மற்றப்படி அக்கட்சியின் கொள்கைகளை ஆட்சேபிக்கும் வீரர்கள் என் எதிரில் வரட்டும் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்துவிட்டால் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதிகள் இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அன்றியும், அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களின் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கிய தைக்கும் இளைத்தவர்கள் அல்ல. ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்து வருகிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். ‘மாமிசம் சாப்பிடுவதானால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொதுவுடைமையும் போலி புலி வேஷம்போல் விளம்பரத்தில் காட்டுவதில் பய னில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது.
சர்க்கார் உத்தரவு மீறுவதே சமதர்மமாகிவிடாது. உத்தரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்து விட்டோம். ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அனுகூலமாகவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத் தான் நாம் சமதர்மம், பொதுவுடைமை என்கிறோம். சர்க்கார் பொதுவுடைமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது.
மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத்தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்கமில்லாமல் போகவில்லை.
ஆதலால் எனது நிலை இன்னது என்பதை ஒருவாறு விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
(திருத்துறைப்பூண்டியில்
21, 22-03-1936 நாட்களில் நடைபெற்ற
தஞ்சை ஜில்லா 5ஆவது சுயமரியாதை மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு – 29.03.1936