வாசிங்டன், ஆக. 6- ”இந்தியாவுக்கு வரிப்போட்டு (US Tariff) சீண்டாதீர்கள்.. ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு வரியை நிறுத்தி வைத்துவிட்டு இந்தியாவை மிரட்டுவது ஆபத்தானது. இதன்மூலம் நட்பில் உள்ள இந்தியாவின் உறவை தீயிட்டு எரிக்க வேண்டாம்” என்று டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியை சேர்ந்த நிக்கி ஹேலே தெரிவித்துள்ளார். இந்தியா மீது தனி பாசம் வைத்துள்ள நிக்கி ஹேலே டிரம்புக்கு எதிராக அதிபர் தேர்தலில் களமிறங்க முயன்றார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த முயற்சி கைகூடாத நிலையில் அவர் தற்போது டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தற்போது இந்திய நாட்டை சீண்டத் தொடங்கி உள்ளார். நம் நாட்டுக்கு 25 சதவீத வரிகளை விதித் துள்ளார். இது வரும் 7ஆம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கூடுதல் வரி தரவேண்டும்
இது இந்தியாவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டிரம்ப்பின் வரி விதிப்பு என்பது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு நிறுவனங்கள் கூடுதல் வரியை வழங்க வேண்டியிருக்கும்.
டிரம்பின் இந்த வரிவிதிப்புக்கு பின்னணியில் ரஷ்யா உடனான இந்திய உறவு தான் காரணம். ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண் ணெயை வாங்கி வருகிறோம். இதனை வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறி வருகிறார். உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. டிரம்பும் இந்த போரை நிறுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா வழங்கும் பணம் உக்ரைன் போருக்கு பயன்படுகிறது. இதனால் இந்தியா ரஷ்யா விடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது. மீறினால் இப்போது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரியை விட அடுத்த 24 மணிநேரத்தில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார். இந்நிலையில் தான் டிரம்பின் இந்த நடவடிக்கையை சொந்த கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவரே கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு இந்தியாவை சீண்ட வேண்டாம் என்று டிரம்புக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக நிக்கி ஹேலே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது. ஆனால் சீனா நாடு, ரஷ்யா மற்றும் ஈரானிடம் (அமெரிக்காவின் இன்னொரு எதிரி நாடு.. ஈரான் மீதும் அமெரிக்கா பொருளா தார தடைகளை விதித்துள்ளது) இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால் சீனா மீதான வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விஷயத்தில் சீனாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு இந்தியா போன்ற நம்முடன் நல்ல நட்பில் உள்ள நாட்டின் உறவை தீயிட்டு எரிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
டிரம்பை எதிர்த்து…
இந்த கருத்தை கூறியுள்ள நிக்கி ஹேலே அமெரிக்காவில் உள்ள பிரபலமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் அய்நா சபையில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். தற்போது டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார். கடந்த அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலே குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முடிவு செய்தார். டிரம்புக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டார்.
குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக நடந்த தேர்வில் டிரம்பும், நிக்கி ஹேலேவும் தான் போட்டியில் இருந்தனர். குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்த நிலையில் நிக்கி ஹேலே பின்னடைவை சந்தித்தார். இதனால் அவரால் அதிபர் வேட்பாளராக போட்டியிட முடியாமல் போனது.
நிக்கி ஹேலே தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா உறவு வலுவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதேவேளையில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவை எதிர்க்க வேண்டும் என்றால் அதன் அண்டை நாடான நம் நாடு மிகவும் முக்கியம் என்று பலமுறை அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பதையும் அவர் எதிர்த்துள்ளார்.