திருவண்ணாமலை, ஆக. 6- திருவண்ணாமலை யில் பவுர்ணமி அன்று நடைபெறும் கிரிவல நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் சாமியார்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் தங்கியிருக்கும், சாமியார் வேடத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், பக்தர்களிடம் மிரட்டி பணம், நகைகளைப் பறிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் சாமியார் வேடம் போட்டு, குகைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தங்கி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், பக்தர்களுக்கு இடையூறு செய்வதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு ஆதரவாக, சில நிறுவனங்கள் இவர்களுக்கு உணவு மற்றும் சேவைகளை வழங்கி, “சேவை செலவு” என்று கணக்கு காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதைத் தடுக்க, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்படி, 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்று காலை கிரிவல பாதையில் தங்கியிருக்கும் சாமியார்களின் உடமைகளை தீவிரமாக சோதனையிட்டனர். கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்த காவல்துறை, போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக் கூடாது என சாமியார்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசியில்
அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
போக்குவரத்து பாதிப்பு
தென்காசி, ஆக. 6- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரத்திற்காக தென்காசி நகரில் கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கொடிகளை காவல்துறை அகற்றியதால், ஆத்திரமடைந்த சில அதிமுகவினர் தென்காசி – திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, பயணிகள் பேருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களும் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. பேருந்தில் இருந்த பயணிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியல் கைவிடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.