சென்னை, ஆக.6- மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம், பகை கூட்டத்தை வெல்வோம் என்று தி.மு.க. சார்பில் ஏ.அய். தொழில்நுட்பத்தில் குறும் படம் வெளியிடப்பட்டு உள்ளது.
குறும்படம் வெளியீடு
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி, தி.மு.க.சார்பில் ஏ.அய். தொழில்நுட்பத்தில் குறும்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள வாச கங்கள் வருமாறு:-
உரிமைப் போராட்டம்!
இன்றைக்கு நாம் ஓரணியில் திரள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தாய்மண் என்பது ஒரு சொல் அல்ல. அது, மக்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒன்று. நம் மண் அடக்குமுறைகளுக்கு எதிராக பல உரிமைப் போர்களை கண்டது. 21-ஆம் நுாற்றாண்டிலும் மண்ணுக்காக தமிழ்நாடு பல உரிமை போராட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.
ஜி.எஸ்.டி. என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து வழங்கப்படவில்லை. பேரிடர் நிவாரண நிதியையும் தரவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், கல்வி நிதி ரூ.2,150 கோடி இன்னும் வந்து சேரவில்லை.
‘நீட்’ எனும் கொடிய தேர்வால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளை நாம் ஓரணியில் திரண்டு தகர்த்து எறிய வேண்டும்.
பகை கூட்டத்தை வெல்வோம்
கீழடி ஆய்வுக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிக்காமல் இழுத்தடிப்பது, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பின் தொன்மையை புறக்கணிப்பது, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதியும், தமிழுக்கு குறைந்த நிதியும் ஒதுக்கீடு செய்வது என மொழி விசயத்திலும் ஒன்றிய அரசு அடக்குமுறை தொடர்கிறது. இதனை தகர்க்கவேண்டாமா?
வீரத்துக்கு பெயர்போன தமிழர்களின் மானம் அடிமைக் கூட்டத்தாலும், அவர்களது எஜமானர்களாலும் சிதைக்கப்பட்டு வருகிறது. தமிழர் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி இழிவுபடுத்துவது, மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிராக ஆளுநரை வைத்து அற்ப அரசியல் செய்வது, தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசுவது என நமக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது.
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டி பார்க்கின்றனர். இனியும் இதை ஏற்க முடியாது. நம் மண் மொழி மானம் காக்க தமிழ்நாடு மக்கள் ஓரணியில் இணைவோம்.
பகை கூட்டத்தை வெல்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.