மதவெறித்தனத்துக்கு
மரணக் குழி வெட்டப் போவது எப்போது?
கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் ஹூளிக்கட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த அரசுப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தலைவராகப் பணியாற்றி வருபவர் சுலைமான் கோரினாயக். இவர் ஓர் இஸ்லாமியர் என்பதால், இவரை எப்படியாவது பள்ளித் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், சிறீராம் சேனா அமைப்பின் வட்ட தலைவர் சாகர் பாட்டீல் ஒரு சிலரைக் கருவியாகப் பயன்படுத்தியுள்ளார்.
கிருஷ்ணா மடார் என்ற உள்ளூர்வாசி வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார்; இதனை வைத்து பெண் வீட்டாருக்கு காதலைச் சொல்லிவிடுவேன் என்று கூறி. மிரட்டி, இந்த குற்றத்தில் ஈடுபட வைத்துள்ளார். பிறகு, கிருஷ்ணா மடார் மற்றும் நாகன்கவுடா பாட்டீல் இருவரும், அருகில் உள்ள கிராமத்தில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கியுள்ளனர். அந்த மருந்துகளை ஒரு குளிர்பானப் பாட்டிலில் கலந்த அவர்கள், அதன்பிறகு, ஒரு மாணவனுக்கு ரூ.500 மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொடுத்து, அதைக் குடிநீர் தொட்டியில் கலக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நச்சு கலந்த நீரை அருந்திய 13 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால், நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து மதவெறியைத் திணிக்க முயன்றவர்களின் கொடூரமான மனநிலையைக் காட்டுகிறது.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். குடிநீர் தொட்டியின் அருகே கிடந்த நச்சுக் கலந்த பாட்டிலையும், அதைக் கலந்த மாணவனின் வாக்குமூலத்தையும் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இந்த வழக்கில், சிறீராம் சேனா அமைப்பின் வட்ட தலைவர் சாகர் பாட்டீல், கிருஷ்ணா மடார் மற்றும் நாகன்கவுடா பாட்டீல் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக அவரைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்கிற வெறித்தனம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கவும் தயங்காத ஒரு கொடூரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம், மதவெறி எந்த அளவிற்கு ஒரு சமூகத்தின் அமைதியையும், மனிதநேயத்தையும் சிதைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கருநாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த செயலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடிநீர் தொட்டியில் மாலை நேரத்தில் நச்சைக் கலந் துள்ளார்கள். இந்த நிலையில் அதிகாலை மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பியதால் நச்சின் வீரியம் குறைந்துள்ளது.
ஒருவேளை தண்ணீர் நிரப்பாமல் இருந்திருந்தால் அந்த நச்சால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பார்கள் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது
2009ஆம் ஆண்டு மங்களூரில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் சிறீராம் சேனா அமைப்பினர் நுழைந்து, அங்கு இருந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தாக்கினர். “காதல் என்பது இந்திய பாரம்பரிய கலாச்சாரத் திற்கு எதிரானது” என்று கூறி இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டது.
சிறீராம் சேனா, இந்துப் பெண்களை வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதையும், ஜாதிமாறித் திருமணம் செய்வதையும் கடுமையாக எதிர்க்கிறது, அவ்வாறு ஜாதிமாறித் திருமணம் செய்ய முயலும் இளைஞரை ஆடையின்றி ஓடவிட்டு அவமானப்படுத்தி அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மோசமான சித்திரவதைகளை செய்வதிலும் இந்த அமைப்பு பெயர் போனது. இதற்கான பல வழக்குகள் அவர்கள்மீது உள்ளன. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற மத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகளும் இந்த அமைப்பு மீது உண்டு. குறிப்பாக, கருநாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் நடவடிக்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பிறர் மூலம் குடிநீரில் நச்சைக் கலக்கும் அளவிற்கு இறங்கி உள்ளனர்.
கருநாடக மாநிலத்தில் இலக்கியவாதியும், சீர்திருத்த வாதியுமான ம.ம.கல்புர்கி (2015 – ஆகஸ்டு 30), பத்திரிகையாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான கவுரி லங்கேஷ் (2017 – செப்டம்பர் 5) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும் பின்னணியில் இருந்தவர்கள் இந்த சிறீராம்சேனா அமைப்பினர்தாம்.
ஒன்றியத்தில் பிஜேபி ஆட்சி என்றைக்கு அதிகார பீடத்தில் அமர்ந்ததோ அன்று முதல் இந்தியாவின் பல பகுதிகளிலும், பல்வேறு பெயர்களில் மதவெறி சக்திகள் கொலை வெறி ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன.
இஸ்லாமியர் என்று தெரிந்தால் அவர்களைப் பழி தீர்க்க எந்த நயவஞ்சக நச்சு வேலைகளையும் செய்யக் கூடியவர்கள் இந்த இந்துத்துவா சக்திகள் என்பதற்கு இது ஒன்று போதாதா? தேவை வெகு மக்கள் கிளர்ச்சியே!