சென்னை, ஆக. 6- காவல்துறை அதிகாரிகளிடம் ஜாதிப் பாகுபாடு தலைதூக்கி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, காவலர்களின் வருடாந்திரப் பணித்திறன் மதிப்பீட்டுப் பதிவில் (ACR) அவர்களின் ஜாதிப் பெயரைக் குறிப்பிடும் முறையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு காவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
காவலர்களின் பணி நியமனம் முதல் ஓய்வுபெறும் நாள் வரை அவர்களின் பதவி உயர்வுகள், தண்டனைகள், ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ACR (Annual Confidential Report) எனப்படும் வருடாந்திர ரகசிய அறிக்கையில் பராமரிக்கப்படுகின்றன.
மேலும், இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், உயர் அதிகாரிகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குவார்கள் அல்லது பதக்கங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.
ஜாதிப் பாகுபாடு ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான காவல் ஆணையத்திடம், காவல் துறையில் ஜாதி சார்ந்த அதிகாரிகள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக காவலர்களின் பணித்திறன் மதிப்பீட்டில் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புகார்களை ஆய்வு செய்த ஆணையம், முக்கியமான ஒரு பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. அதில், “ஒரு காவலரின் பணித்திறனை மதிப்பீடு செய்ய, அவரது ஜாதி பற்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஜாதிப் பெயரை அறிந்திருப்பது, அதிகாரிகள் சார்புத்தன்மையுடன் செயல்பட வழிவகுக்கும்.
எனவே, காவலர்களின் பணித்திறன் மதிப்பீட்டுப் பதிவில் ஜாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளது.
காவலர்களின் பணித்திறன் மதிப்பீடு மற்றும் வருடாந்திர ரகசிய அறிக்கை ஆகியவை தற்போது ‘ஸ்பேரோ’ (SPARROW) என்ற செயலி மூலம் மின்னணு முறையில் பாதுகாக்கப்படுகின்றன.
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய பரிந்துரையின்படி, ‘ஸ்பேரோ’ செயலியில் இருந்து காவலர்களின் ஜாதிப் பெயரைப் பார்க்க முடியாதபடி மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, காவலர் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையையும், பாரபட்சமற்ற தன்மையையும் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.