சென்னை, ஆக.6- பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழ் நாட்டிற்கு ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் 14-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.