2026 இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் கூட்டணி ஒற்றுமையுடன் வெற்றி பெற்று  ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் அமைவது உறுதியே!

7 Min Read
மதம், ஜாதிப் பிரிவினைகளே பி.ஜே.பி.யின் மூலமும் – அணுகுமுறையும்!
* ஆண்டொன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு – ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் என்று
பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்ததுதான் பி.ஜே.பி.!
*தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில், அவர்களின் வித்தைகள், வியூகங்கள் , வேஷங்கள் எடுபடாது!

 கோயில், மதம், ஜாதியைக் காட்டி, வட மாநிலங்களில் மக்களை வயப்படுத்தி ஆட்சியில் அமர்ந்த அந்த வித்தை களும், வியூகங்களும் தமிழ் மண்ணில் எடுபடாது. காரணம்,  இது தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொள்கைக் கூட்டணி பலத்துடன் 200–க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் அமைவது என்பது உறுதி என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நடக்காத தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வெற்றி பெற்றனர் 2014 இல்!

ஆர்.எஸ்.எஸ்.சும் – அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க.வும் எப்படி எப்படியோ ‘வித்தைகளையும்’, ‘வேஷங்களையும்’, ‘வியூகங்களையும்’ செய்து, மறைமுகத் திட்டமாக இந்தியாவை, ‘ஹிந்துராஷ்டிரம்’ என்ற முழு ஹிந்து நாடாகவே (முந்தைய நேபாளத்தைப் போலவே) ஆக்கிவிட சாம, பேத, தான, தண்டம் என்ற பல வழிமுறைகளையும், கடைந்தெடுத்த உருமாற்றப் பித்தலாட்டங்களையும் செய்து, 2014 இல் ஒன்றிய ஆட்சியை, நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வெற்றி பெற்றனர்.

பழைய காங்கிரஸ் ஆட்சி மீதிருந்த வெறுப்பினால்,

வேலை கிட்டாத பல லட்சக்கணக்கான இளைஞர்க ளின் விரக்தியையும் பயன்படுத்திக் கொண்டு,

ஏழை, எளிய மக்களிடையே மூடநம்பிக்கையை விதைத்து,

அதற்கும் மேலாக, வட மாநிலங்களில் இராமன் கோயில் ஆசையைக் காட்டியும், சிறுபான்மை யினர்மீதான  வெறுப்பை விசிறி விட்டும்,

ஆர்.எஸ்.எஸ்.சின் அஜெண்டாக்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்!

ஒன்றிய ஆட்சியைப் பிடித்து, ஏமாந்த வாக்கு வங்கியின் மூலமே அதிகாரத்தைக் கைப்பற்றினர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்!

தெற்கே தமிழ்நாடு, கேரளம், கிழக்கே மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநில வாக்காளர்களை வயப்படுத்தி, ‘‘வளர்ச்சித் திட்டம்’’ என்ற முகமூடியை அணிந்து, ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தனர். நன்கு திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். சின் அஜெண்டாக்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

2014 ஆம் ஆண்டு தேர்தலி்ல் ‘வெற்றியே முக்கியம்’ என்பதால், ஹிந்துத்துவா அம்சங்களான

  1. இராமர் கோவில் கட்டுதல்
  2. 370 என்ற காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து பறித்தல்
  3. பொது சிவில் சட்டம்

ஆகியவற்றை அதிகமாக வற்புறுத்தாமல், ‘சப்கா சாத்’, ‘சப்கா விகாஸ்’ ‘விஸ்வகுரு’ என்றெல்லாம் வளர்ச்சி வேஷம் போட்டு, ‘மாயமான்’ வித்தைகளைக் காட்டி பதவிக்கு வந்து அமர்ந்தனர்.

வாக்காளர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர்!

அப்போது பிரதமராக விரும்பிய மோடி, பிரச்சாரத்தில்,

  1. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம்
  2. ஏழை, எளிய, விவசாய, கிராமப்புற மக்கள் ஒவ்வொருவரும் வங்கிக் கணக்குகளைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டுதோறும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் ‘பொத், பொத்தென்று’ உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விழும் என்று வாய் நீள வாக்குறுதிகளை வெளி யிட்டு, எப்படியோ வாக்காளர்கள் அடுத்தடுத்து ஏமாற்றப்பட்டனர்.

பதவிக்கு வந்த பிறகு ‘‘இந்த வாக்குறுதிகள் எல்லாம்  ஜூம்லா’’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிரித்துக் கொண்டே கூறியதை இந்த நாடு பார்த்தது.

‘குஜராத் மாடல்’, ‘டபுள் என்ஜின் மாடல்’ என்றெல்லாம் கூறி, அரசு, தனியார் சமூக ஊடகங்கள் எல்லாவற்றையும் தங்களுக்கு ஆதரவாக முடுக்கி, ஆட்சியின் அவலத்தை மறைத்தனர்.

தங்களது காவிப் பிடிக்குள் கொண்டு வந்தனர்

தேர்தல் ஆணையம், சி.பி.அய்., வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை ஏவுகணை களாக்கி, எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மாநிலங்களைத் தங்களது காவிப் பிடிக்குள் கொண்டு வந்தனர்.

நிதி நெருக்கடியை உருவாக்கிடும் புதிய வியூகம்!

ஆளுநர்கள்  முழுக்க, கட்சி அரசியல் நடத்தும் ‘கடமை வீரர்களாக’ ஆக்கப்பட்டு, அரசியல் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,  தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்குரிய நிதியைத் தராமல், இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியைக்கூட நிறுத்தி வைத்து, மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கிடும் புதிய வியூகத்தை அரங்கேற்றினர்.

முதல் தேர்தலில் ஏமாந்த நம் நாட்டு வாக்காளர்கள், விரக்தி அடைந்தனர். முன்பைவிட கூடுதல் இடங்களைப் பெறுவதற்காக, வித்தைகளாலும், வியூகங்களாலும் தங்கள் மறைமுக ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை ஒவ்வொன்றாக அமல்படுத்தி, தங்களது ஜனநாயக ஒப்பனைகளை, முகமூடிகளைக் கழற்றிக் காட்ட சற்றும் கூச்ச நாச்சப்படவில்லை.

அச்சுறுத்தல் அரசியல் ஆயுதங்களை முழுப் பிர யோகம் செய்து, அரசியலமைப்புச் சட்ட விதிகளை மிக வெளிப்படையாகவே மீறும் நிலையை உருவாக்கி விட்டனர்.

உதாரணத்திற்கு, துணை சபாநாயகரே இல்லாமல் நாடாளுமன்ற மக்களவை 5 ஆண்டுகள் – ‘‘விசித்திர ஜனநாயகம்’’ திடீரென்று மாநிலங்களவை துணைத் தலைவரின் பதவி விலகல் உள்பட பற்பல!

முக்காலியான ஆட்சிக்கு ஒட்டு வைத்து நாற்காலியானது!

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்தில், உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஏற்காமல், தலைமைத் தேர்தல் ஆணையர் முதல், மூன்று உறுப்பினர்களையும் தங்களுக்கு உகந்தவர்களை,  தங்கள் விருப்பத்திற்கு நியமித்து – பகிரங்கமான சார்பு நிலை – ‘சாய்ந்த தராசு’ போல மூன்றாவது முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணி – முழு ஒற்றுமையோடு செயல்படத் தவறிய நிலையிலும்கூட, மோடி அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை (Absolute Majority) கிட்டாததே, நாட்டு வாக்களர்களின் விழிப்பு ணர்வுக்கு ஆதாரம் என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு காரணமாக முக்காலியான ஆட்சிக்கு ஒட்டு வைத்து நாற்காலியானது.

அவர்களுக்குச் சிறப்பு நிதிச்சலுகை உள்பட பல வகை வித்தைகள்மூலம் ஓராண்டைக் கடந்துவிட்டது. எஞ்சிய ஆண்டுகள் முழு எதேச்சதிகாரத்தினை நம்பித்தான் தொடரும் நிலை.

ஆட்சியின் இத்தகைய இழுபறி நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், தனது ஏகபோக கட்சியாகிய பா.ஜ.க.வுக்குமான உறவு கலகலத்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கை அஜண்டாவை அவசரப்படுத்தி, நிறைவேற்றிவிட துடியாய்த் துடிக்கிறது.

தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டனர்

கல்வித் துறை காவி மயமாக்கம், ஹிந்துராஷ்டிர இலக்கின் வேகம், ஹிந்தி – சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு, பக்தி போதையூட்டும் மயக்க மருந்துகளான கோயில் பண்டிகைகள், தமிழ்நாட்டில் இதற்குமுன் முக்கியத்துவம் இல்லாத கோயில்களையெல்லாம் முக்கியப்படுத்துதல், விஷ உருண்டைக்குச் சர்க்கரைப் பூச்சுபோல திருவள்ளுவர், இராஜராஜ சோழனுக்கு முக்கியத்துவம், திடீர் முருக பக்தி விழா என்றெல்லாம் செய்தும் தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியிலான தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டனர்.

காரணம், தமிழ்நாடு என்பது ‘விநாயகர் இறக்குமதி அரசியல்’, இராம பக்தி, பஜனை அரசியல்கள் எல்லாம், எந்தத் தாக்கத்தையும்  ஏற்படுத்த முடியா வண்ணம், தந்தை பெரியாரால் தோற்கடிக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாகும்!

2026 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிட்டாது!

நவீன விபீஷணர்கள், அனுமார்கள், கூலிப் பட்டா ளம், வாடகை வாய் வகையறாக்களைப் பிடித்து விஷமப் பிரச்சாரங்கள் செய்யும் ‘ஆரிய மாயை’ இவற்றால் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிட்டாது!

அவர்களது ஒரே நம்பிக்கை – கடவுள் பக்தி மயக்க மாத்திரை – திருவிழா குளோரோபார்ம்கள் – சடங்கு, சம்பிரதாய கண்ணிவெடிகள் –  இவைதான்.

சாதனை விளக்கப் பெருந்திரள் பிரச்சார பெருமழை

அவர்களது இந்த வியூகத்திற்குப் பதில் – பக்கு வப்பட்ட பகுத்தறிவு, ‘திராவிட மாடல்’ சாதனை விளக்கமே!

போட்டி பக்தி போதையை அவர்களைவிட அதிகம் தந்து, வாக்கு வங்கியைத் திருப்பலாம் என்ற எண்ணம் தப்புக் கணக்காகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.

மற்ற எவரையும் விட, தி.மு.க. கூட்டணி 200–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, பாசிச மதவெறியின் இடுப்பை ஒடித்து, முக்காடு போட்டு ஓட வைப்பது நமது ‘திராவிட மாடல்’ சாதனை விளக்கப் பெருந்திரள் பிரச்சார பெருமழையே!

நம்முடைய கருத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் தான், பொருளாதார நிபுணர் பரகால பிரபாகர் அவர்கள் (நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்) தனது “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” புத்தகத்தில் மிகத் தெளிவாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘பா.ஜ.க.வை வெற்றி கொள்ளுதல் என்பது வெறும் தேர்தல் பிரச்சினையல்ல; இந்தியாவின் இன்றைய நெருக்கடி என்பது அதிகாரத்தில் இருக்கும் ஓர் அரசியல் கட்சியால் மட்டுமல்ல, ஆழமாக வேரூன்றியுள்ள பெரும்பான்மை ஆதிக்க மனப்பான்மையால் உருவானது’ என்று கூறுகிறார்.

‘இது ஒரு பண்பாட்டு, கொள்கைக் கோட்பாட்டு, உளவியல் சவாலாகும். அதற்கான நிரந்தரத் தீர்வுக்கு, ஆழமான சிந்தனை மாற்றத்தை உருவாக்குவதை, நீடித்த இலட்சியப் பணியாகக் கொண்டு தொடர்ந்து செயல்படவேண்டும்.  வெறும் தேர்தல் பிரச்சாரங்களால் தீர்வு கிடையாது’ என்கிறார்.

இதற்குள் அடங்கியுள்ள பொருளைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்!

தந்தை பெரியார் அவர்கள், தி.மு.க.விற்கு என்ன தேவை என்பதை குறிப்பிடும்போது, ‘‘கடமை, கண்ணி யம், கட்டுப்பாடு என்பவற்றில், கடமை, கண்ணியம் என்பதற்குக்கூட வேறு வியாக்கியானம் சொல்லலாம்; ஆனால், கட்டுப்பாடு என்பதற்கு வேறு வியாக்கியானம் சொல்ல முடியாது’’ என்றார்.

மற்ற எல்லா நேரங்களையும்விட, தி.மு.க. தலை வருடைய உடல்நலப் பாதுகாப்புக்கும், உள்ள நல பாதுகாப்புக்கும், கட்சியின் நலனுக்கும், நாட்டின் நல னுக்கும் அந்தக் ‘கட்டுப்பாடே’ உரிய, சரியான மருந்தாகும் என்பதை இப்போதும், எப்போதும் உறவோடும், உரிமையோடும் நினைவுபடுத்துவது நமது கடமை!

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் எடுத்துக் காட்டான ஒற்றுமையும், தி.மு.க. பொறுப்பாளர்களின் ‘1967 மாடல் உத்வேகமுமே’ இன்றைய தேவையாகும்!

வெற்றி நமதே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

6.8.2025   

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *