சென்னை, ஆக. 5 சென்னை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில் சேர தகுதியுடையவர்கள் வரும் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினர் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்கள் சுயமாக தொழில் செய்ய வழிவகை செய்யும் வகையில், சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளிக்க மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் ‘சென்னை மாவட்ட முசுலிம் மகளிர் உதவும் சங்கம்’ தொடங்கப்பட்டது. இந்தச் சங்கத்தில் கவுரவ செயலர், இணைச் செயலர், உறுப்பினர்கள் என முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், சங்க நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்தக் குழுவில் உறுப்பினர்களாக சேர விரும்பும் நபர்கள், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இவர்கள் சமூகம் மற்றும் பொதுநலப் பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி ஆர்வத்துடன் செயல்படுபவர்களாகவும், இவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளோ, நீதிமன்ற வழக்குகளோ நிலுவையில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள். இத்தகைய தகுதிகளுடைய சங்க நிர்வாக குழுவில் இடம் பெற விரும்பும் சிறுபான்மையின முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தை வரும் 15-ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ‘மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், 6-ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை -1’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அதில் தெரிவித்துள்ளார்