மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. ஆனாலும், பருவமழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையே காணப்படுகிறது. சென்னையில் 87 இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்களாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதை எதிர் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை அகற்ற டிராக்டர் மூலம் இயங்கும் நீர் இறைக்கும் மோட்டார் பம்புகளை வாடகைக்கு எடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மண்டல வாரியாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் எடுத்துச்செல்ல ஏதுவாக டிராக்டர் மூலம் நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டது. இது விரைவாக மழைநீரை அகற்ற கைகொடுத்தது. எனவே, இந்த ஆண்டும் பருவமழையை எதிர் கொள்ள 477 நீர் இறைக்கும் டிராக்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 5 மாதம் வரையில் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருக்கும். மொத்தம் ரூ.30.52 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மண்டலவாரியாக குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரும் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.