ஸநாதனச் சங்கிலியை நொறுக்கும் ஆயுதம் கல்வி: கமல்
நீட் தேர்வால், 2017ஆம் ஆண்டுக்கு முன்பு மருத்துவர்கள் உருவானது போன்ற நிலை இப்போது இல்லை என கமல் ஆதங்கப்பட்டார். ‘அகரம்’ நிகழ்ச்சியில் பேசிய அவர் நீட் தேர்வு பலரின் மருத்துவக் கனவை அழித்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார். ஸநாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான் எனவும் கமல் உறுதிபட கூறினார்.
ஒன்றிய அரசுக்கு எதிராக போர்க்கொடி.. ஒ.பி.எஸ். வியூகம்
ஒன்றிய அரசின் செயல்பாடு களுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்த ஒ.பி.எஸ். தனது அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர் தோல்விகளால் மக்களின் நம்பிக்கையை அதிமுக இழந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக அழிவுப் பாதைக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி இனி இல்லை என முடிவானதால், பாஜக வுக்கு எதிராக ஒ.பி.எஸ். போர்க் கொடி தூக்குவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சரிவடையும் குழந்தைப் பிறப்பு விகிதம்
தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 9.25 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்தாண்டு 8.47 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. பொருளாதார நிலை, அதிகரித்து வரும் செலவு உள்ளிட்ட பல காரணங்களால் பல பெற்றோர்களும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம்
307 கட்சிகள்!
தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் 12, அங்கீகாரம் பெறாமல் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் 295 உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, நாதக, ஆம் ஆத்மி, சி.பி.அய்.
சி.பி.எம். பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 12 கட்சிகள் உள்ளன. அதேபோல், பதிவு செய்து அங்கீகாரம் பெறாமல் பாமக, தவெக உள்ளிட்ட 295 கட்சிகள் உள்ளன.