வைகோ கண்டனம்
சென்னை, ஆக.5- ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (4.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள், அங்குள்ள வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநில தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ? அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலைக்காக வந்து தங்கியிருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள், பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்களின் பெயரை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். சுமார் 75 லட்சம் பேர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகும்.
தமிழ்நாட்டை குறி வைத்து இருக்கும் பா.ஜனதா, வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தேர்தலில், ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. தலைமை தேர்தல் ஆணையம், வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.