1977-இல் ஜனதா அரசு அமைந்தது முதலே, இந்தி திணிப்பு முயற்சிகள் பெருகின. 1978 மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய பிரதமர் மொரார்ஜி தேசாய், ‘இந்தி திணிக்கப்படுவதாக செய்யப்படும் பரப்புரையில் உண்மை இல்லை’ என்றார். ‘ஆனால், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவிற்கு ஒரு இணைப்புமொழி அவசியம், அது 50-60 சதவிகிதம் மக்கள் பேசும் இந்தியாகத்தான் இருக்க முடியும்’ என்றார். அதன் தொடர்ச்சியாக மே மாதத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் துணைச் செயலாளர் பொறுப்புக்கு மேலே இருப்பவர்கள், இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஜனதா அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
ஜனதா அரசின் இந்தப்போக்கைக் கண்டித்து, தி.க. சார்பிலும், தி.மு.க. சார்பிலும் அதே ஆண்டில் 2 முக்கிய மாநாடுகள் நடைபெற்றன. ஜூன் 15-ஆம் நாள் சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகம் சார்பில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அங்கு பேசிய கலைஞர், “இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.-வும் தி.க.-வும் தொடர்ந்து போராடும்” என்றார்.
தி.மு.க. சார்பில், டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் திருச்சியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. காலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. புலவர் கோவிந்தன் தலைமையில், நடைபெற்ற இம்மாநாட்டை, வைகோ தொடங்கிவைத்தார். பெரியார் படத்தை கி.ஆ.பெ.விசுவநாதமும், அண்ணா படத்தை ஆசிரியர் கி.வீரமணியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தை முடியரசனும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி படத்தை மன்னை நாராயணசாமியும், இராமாமிர்தம் அம்மையார் படத்தை அலமேலு அப்பாத்துரையும், மொழிப்போர் தியாகிகள் படத்தை இளம்பரிதியும் திறந்துவைத்தனர்.
தமிழையும், அனைத்து மாநில ஆட்சி மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டு மென்ற தீர்மானத்தை தி.மு.கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய கலைஞர், 1979-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளை இந்தி எதிர்ப்பு நாளாக தி.மு.கழகம் கடைபிடிக்கும் என்று அறிவித்தார்.
“அன்றைய தினம் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றுவார்கள், கருப்புச் சட்டை அணிந்து இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் செல்வார்கள்” என்று தெரிவித்தார் கலைஞர்.
தி.மு.கழகத்தின் இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகமும் பங்கேற்கும் என்று ஆசிரியர் கி. வீரமணியும் அறிவித்தார். இதற்கிடையே ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு வந்து மொரார்ஜி தேசாய், ‘இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது செத்த குதிரை’ என்று தமிழர்களை உசுப்பி விட்டார். ஜனவரி 26ஆம் தேதி இந்தி எதிர்ப்புக் குதிரை பாய்ந்து செல்லும் என்று பதிலளித்தார் கலைஞர்.
திட்டமிட்டபடி, ஜனவரி 26-ஆம் தேதி பெரியார் திடலில் இருந்து அண்ணா அறிவாலயம் நோக்கி பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். கோவை, திருச்சி, மதுரை என பல்வேறு நகரங்களில், தி.மு.கழகத்தின் முன்னணி வீரர்கள் தலைமையில் பேரணி நடை பெற்றது. அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக்கும் வரையில், இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் தொடரும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
– ர. பிரகாசு
நன்றி: ‘முரசொலி’ 5.8.2025